‘மறுமலர்ச்சி 2’ படத்தில் பணிபுரியவில்லை என தங்கர் பச்சான் அறிக்கை …..!

1998-ம் ஆண்டு பாரதி இயக்கத்தில் மம்மூட்டி, தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மறுமலர்ச்சி’.இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தங்கர் பச்சான் பணிபுரிந்திருந்தார்.

தற்போது ‘மறுமலர்ச்சி 2’ உருவாகி வருகிறது .அதிலும் தங்கர் பச்சான் பணிபுரியவுள்ளதாகவும் தகவல் பரவியது.

இது குறித்து தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

” ‘மறுமலர்ச்சி 2’-வில் நான் வேலை செய்யப்போவதாகத் தவறான தகவல் வந்துள்ளது. அது முற்றிலும் தவறான தகவல். அப்படி என்னிடம் யாரும் பேசவில்லை. நான் கடந்த ஒரு மாதமாக வெளியூரில் அமைதியான சூழலில் கதை எழுதி வருகிறேன். ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டுத் தவித்திருந்தேன்.

இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது எழுதி முடித்தேன்.

தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன்.

முழுமையான இரண்டு வாரங்களில் இடைஞ்சல் இல்லாத தூய்மையான காற்று, தூய்மையான நீர், இயற்கை உணவு இவற்றுடன் கூடிய சூழலில் இதை எழுதி முடித்திருக்கிறேன்.

கரோனா காலத்தில் எனக்கான பணிகளில் பல முன்னேற்றத் தடைகள் இருந்தாலும் இரண்டு சிறந்த திரைக்கதைகள் கிடைக்க உள்ளன எனும் மகிழ்ச்சி அனைத்தையும் மறக்கச் செய்கின்றன”.

இவ்வாறு தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.