தஞ்சை நகராட்சி அலுவலகம்தஞ்சை:

க்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தஞ்சை மாநகாராட்சி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து தொழிலாளர்களை தூண்டிவிடுவதாக சமூக ஆர்வலர் கரிகால் சோழன் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பு..

இது குறித்து அவர் நம்மிடம் தெரிவித்ததாவது:

“அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறேன். தஞ்சையில் உள்ள கரந்தை உமா மகேஸ்வரா கல்லூரி அருகிலும் சுமார் மூன்று ஏக்கர்  குளத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.   செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டி கிராமம் தெற்கில் தனியார்  கல்லூரி ஒன்றும் அரசு நிலம் 50 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளது.

கரிகாலன்

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட விஜயா திரையரங்கை ஒட்டிய அழகிகுளமும், பொதுக்கழிப்பறை 12400 சதுர அடியும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இது குறித்தும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தேன். கடந்த 20ம் தேதி நீதியரசர் டி.எஸ். சிவஞானம், நீதியரசர் ஆர் தாரணி ஆகியோர் பெஞ்ச்சுக்கு இந்த வழக்கு விசாரணக்கு வந்தது.

“ஆக்கிரமிப்பு செய்த 18 பேர்களையும் வழக்கில் இணையுங்கள்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 10ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

காளிமுத்து

ஆகவே ஆக்கிரமிப்பாளர்களான அந்த 18 பேரின் முகவரி மற்றும் விவரங்களை அறிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் பொறுப்பு வகிக்கும்  ஆர்.டி.எம்.ஏ. காளிமுத்துவிடம் மனு அளித்தேன். அதைவாங்கி வைத்துக்கொண்ட அவர், “ஆர்.டி.ஐ.யில் கேளுங்கள். நீதிமன்றத்துக்காக விபரங்கள் தர முடியாது” என்றார்.

நான், “வரும் பத்தாம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. ஆர்.டி.ஐ.யில் மனு செய்தால் தாமதமாகும். தவிர, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது மாநகராட்சியின் வேலை. அதை நான் செய்கிறேன். எனக்கு உதவக்கூடாதா” என்றேன்.

அதற்கு அவர் என்னை மரியாதை இன்றி ஆபாசமாக பேசினார்.

ஆகவே நான், “நீங்கள் தவறாக நடந்துகொண்டால் உங்கள் உயரதிகாரியான சி.எம்.ஏ.விடம் உங்கள் மீது புகார் அளிப்பேன்” என்றேன்.

அதன் பிறகும் அவர் மரியாதையின்றி ஆபாசமாக பேசினார். மேலும் மிரட்டலும் விடுத்தார்.

நான் எழுந்து வந்துவிட்டேன்.

அவரோ மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களிடம், நான் தவறாக பேசியதாக தூண்டிவிட்டு போராட்டம் நடத்தச் சொன்னார். அவர்களும் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து என்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

காளிமுத்து இதோடு விடவில்லை. மற்ற ஊர் நகராட்சி ஊழியர்களையும் தொடர்புகொண்டு எனக்கு எதிராக போராட்டம் நடத்த வற்புறுத்துகிறார்.

இதையடுத்து காவல்துறையில் என் மீது 294 பி ( பணி செய்யவிடாமல் தடுத்தல்), 353 (மிரட்டுதல்) , 506/2 (கடுமையாக மிரட்டுதல்) ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

நான் இப்போது காளிமுத்து மீது,உள்துறை முதன்மை செயலாளர்,  காவல்துறை தலைமை இயக்குநர், மண்டல காவல்துறை தலைவர், தஞ்சை காவல்கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பி உள்ளேன்” என்றார் கரிகால் சோழன்.

மேலும் அவர், “ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, தஞ்சை மாவட்ட ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மேலும் அப்பாவி தொழிலாளர்களை தவறாக வழிநடத்தி போராட தூண்டுவதும் தவறு” என்றார்.

நாம் தஞ்சை மாநகராட்சி ஆணையர் பொறுப்பு வகிக்கும் காளிமுத்துவை தொடர்புகொண்டு பேசினோம்.

“பொதுநல நோக்கோடு வழக்கு தொடரந்துள்ளவருக்கு ஆக்கிரப்பு செய்தவர்களின் விபரத்தை தர மறுத்து, தொழிலாளர்களை தூண்டி விடுவதாக கூறப்படுகிறதே” என்று கேட்டோம்.

அதற்கு அவர், “அந்த நபர் குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறேன். அங்கு கேட்டுக்குங்க” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார்.

காளிமுத்து விரிவாக பதில் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

“பொது நோக்கத்தோடு கேட்கப்படும் தகவல், அதுவும் நீதிமன்ற உத்தரவுப்படி கேட்கப்படும் தகவல்களை அளிப்பதுதானே அரசு அதிகாரியின் பணி” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.