தஞ்சை – மதுரை பசுமைவழிச் சாலை பணிகள் தொடங்கியது.

சென்னை

ஞ்சாவூரில் இருந்து மதுரை வரையிலான பசுமை வழிச் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழி பசுமை வழிச்சாலை பணிகளில் நிலம் கையகப் படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  பல எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.   பொதுமக்களும் இதை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.    பல சமூக ஆர்வலர்களும் இந்த சாலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தேசிய சாலைப் போக்குவரத்துக் கழகம் இதே போன்று மேலும் எட்டு சாலைகள் அமைக்க உள்ளதாக அறிவிப்பு விடுத்திருந்தது.   அவற்றில் ஒன்று தஞ்சாவூரில் இருந்து மதுரை வரையிலான 4 வழிச் சாலை ஆகும்.   இந்த சாலையில் தஞ்சாவூர் – காரைக்குடி வரையிலான சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.    அதன் பிறகு காரைக்குடி – மேலூர் சாலையும் அது முடிந்த பின் மேலூர் – மதுரை சாலையும் அமைக்கப்பட உள்ளன.

தற்போது தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு செல்ல திருச்சி வழியாக 190 கிமீ தூரமும், மானாமதுரை வழியாக 176 கிமீ தூரமும் பயணிக்க வேண்டி உள்ளது.  இந்த சாலை அமைக்கப்பட்டால் இந்த தூரம் 15 லிருந்து 25 கிமீ தூரம் குறையும்.   அத்துடன் தெற்கு தமிழகத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் சுலபமான வழித்தடமாக அமையும்.    விக்கிரவாண்டியில் இருந்து தஞ்கைக்கு ஏற்கனவே 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத் தக்கது.