தஞ்சாவூர்:
ஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும்  அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
பாரம்பரியம் மிக்க கலைப்பொருட்களான தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும்  அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு  கேட்டு தமிழகஅரசின் பூம்புகார் (சிற்பகுழுவிற்கான அமைப்பு) அமைப்பு சார்பில் கடந்த  2013 ஆம் ஆண்டு இதற்காக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தற்போது அதற்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டு, அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தஞ்சையின் பிரசித்திப் பெற்ற கலைப்பொருட்களான  தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம் போன்றவற்றின் வரிசையில் தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடும் மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. மிகவும் பழைமையான இந்த கலைக்கு  தனிச்சிறப்பு உண்டு.
தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது.  இதன் மூலம் கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது
தற்போது, இந்த நெட்டி வேலைப்பாடுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள அரும்பாவூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் உலகப்புகழ் பெற்றது.  இத்தகைய மரவேலைப்பாடுக்கு தேக்கு, மாவிலகை, பூவாகம், வேம்பு, மா, அத்தி, ரோஸ்வுட் போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மரச்சிற்பங்களில், அனைத்து விதமான இறை உருவங்கள், தேர்கள், கொடி மரம், வெள்ளெருக்கில் செய்யப்படும் விநாயகர், ராமர் பாதம் போன்றவை மிகவும் புகழ் பெற்றவை.  இந்த அரும்பாவூர் மர வேலைப்பாடுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சிறப்பு மிக்க 23 கைவினைப் பெருள்களுக்கு புவிசார் குறியீடு  பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது, தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரவேலைப்பாடுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.