தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம்: 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுமா?

1995ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ தலைமையில் தஞ்சையில் 8வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது.  அதையொட்டி தஞ்சை நகரம் முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக தஞ்சையிலிருந்து நாகை -பட்டுக்கோட்டை சாலைகள் பிரியும் சந்திப்பில் 5 அடுக்கு கோபுரம் அமைப்பாக தமிழ் மொழிக்கு தொன்மையான இலக்கணம் படைத்த “தொல்காப்பியர் நினைவு கோபுரம்” அமைக்கப்பட்டது.  அந்த இடத்திற்கு “தொல்காப்பியர் சதுக்கம்” எனவும் அதனருகே இருந்த குடியிருப்பு பகுதிக்கு “தொல்காப்பியர் நகர்” எனவும் பெயரிடப்பட்டது..

முக்கோண வடிவில் அமைந்த இந்த சதுக்கத்தினுள் சிறிய அளவில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் செயற்கை நீருற்று உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.. ஐந்தாவது தளம் வரை செல்ல படிக்கட்டுகளும் உண்டு. 5வது தளத்தில் நின்று பார்த்தால் ஒரு பகுதி தஞ்சை நகரின் அழகை பார்த்து ரசிக்க முடியும்.

இப்போது இந்த நினைவு கோபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்வபோது வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேல் தளங்களுக்கு செல்லும் படிக்கட்டுகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. மேலும் உலகின் ஒப்பற்ற மொழியான தமிழின் ஆதி இலக்கண நூலான ஒப்பிலா “தொல்காப்பியத்தின்” பெயரால் அமைந்துள்ள இந்த நினைவிடத்தில் தமிழின் பெருமையையோ அல்லது தொல்காப்பியம் / தொல்காப்பியரின் சிறப்பையோ அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்லும் யாதொரு தகவலும் கிடையாது.

இதே நாளில் திறக்கப்பட்ட தஞ்சை நகரின் மத்தியில் அமைந்துள்ள “ராஜராஜ சோழன் மணி மண்டபத்தில்” மாமன்னர் ராஜராஜரின் புகழ் மற்றும் வரலாற்றை விளக்கும் தகவல்கள், அகழ்வாராய்ச்சி யில் கிடைக்கப்பெற்ற தொன்மையான பொருட்கள் ஆகியவற்றை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆதலால் அந்த மணி மண்டபத்திற்கு வருவோர் அந்நாளைய வரலாற்றை அறிய முடிகிறது. மேலும் நினைவு சின்னங்கள் அமைக்கப்படுவதே அவற்றின் வரலாற்றை, சிறப்பை அடுத்தடுத்த தலைமுறைகள் அறிந்து கொள்வதற்காக தான்.

அந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் நினைவு சதுக்கத்திலும் அதன் சிறப்பினை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறிய நூலகம் மற்றும் தொல்காப்பியத்தின் சிறப்புகளை சுவர்களில் சித்திரமாகவும், வரிகளாகவும் எழுதி வைக்கவும் வேண்டும் என்பது தஞ்சை மக்களின் 22 ஆண்டுகால கோரிக்கை.

தற்போது  அடுத்து ஒரு உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கும் தமிழக அரசு இப்போதாவது நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா?

செய்திக் கட்டுரை  மற்றும் படங்கள்: தஞ்சை ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published.