பெட்ரோலிய மண்டல துரோகத்தை ஒப்புக்கொண்ட திமுகவுக்கு நன்றி! அன்புமணி

--

நாகப்பட்டினம்,

டலூர் மாவட்டங்களில் பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதைக் கண்டித்து மக்களுடன் இறங்கி போராடாமல் திமுக அமைதி காப்பது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்காமல் முதன்மை செயலாளர் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஆனாலும், மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படவில்லை என்பதே உண்மை.

தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. தளபதி என்பவர் தாமே முன்னின்று பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மற்றவர்களை ஏவிவிட்டு எதிர்கொள்ளும்படி கூறக்கூடாது.

எது எப்படியிருந்தாலும் அண்ணன் துரைமுருகன் பெயரில் நீண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு அறிக்கை வந்திருப்பதில் மகிழ்ச்சி.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அறிக்கை என்றால் அது துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் பெயரில் தான் வெளிவரும்.

இதன் பின்னணியில் திமுக நடத்தும் ஜாதி அரசியலை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டி ருக்கிறார்கள். அண்ணன் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளிவந்திருந்தாலும் கூட, இதை அவர் எழுதியிருக்க மாட்டார்.

இப்படி ஒரு அறிக்கை அவர் பெயரில் வந்தது அவருக்கே தெரியுமா? என்பது தெரியவில்லை. ஏனெனில், அண்ணன் துரைமுருகன் எழுதியிருந்தால் அது லாஜிக்காக இருந்திருக்கும். இப்படித் தப்பும் தவறுமாக இருந்திருக்காது.

அறிக்கையின் இரண்டாவது பத்தியின் முதல் சில வரிகளில் பெட்ரோலிய மண்டலத்திற்கு திமுக ஆட்சியில் தான் அனுமதி கொடுக்கப்பட்டதாக மருத்துவர் அய்யா கூறுவதில் உண்மையில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

அடுத்த சில வரிகளில் தமிழகத்திற்கு முதலீடு வர வேண்டும் என்பதற்காகத் தான் இத்திட்டத்திற்கு ஆய்வு நடத்த கலைஞர் அனுமதி கொடுத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் எது உண்மை என்பதை செயல்தலைவரிடம் கேட்க வேண்டுமா… அண்ணன் துரைமுருகனிடம் கேட்க வேண்டுமா? என்பது தெரியவில்லை.

எது எப்படியாகினும் அதற்கு பிந்தைய வரிகளில் இத்திட்டத்திற்கு திமுக தான் ஆய்வு அனுமதி அளித்தது என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இந்த பாவத்தையும், துரோகத்தையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.

2006-11 காலத்தில் திமுக கூட்டணியில் தானே பா.ம.க. இருந்தது, அப்போதே கலைஞரிடம் எடுத்துக் கூறி திட்டத்தை தடுத்திருக்கலாமே? என்று அண்ணன் துரைமுருகன் வினா எழுப்பியுள்ளார்.

சரியான கேள்வி தான். 2006-11 காலத்தில் திமுக கூட்டணியில் பா.ம.க. இல்லை. மாறாக பா.ம.க. ஆதரவுடன் திமுக ஆட்சி நடைபெற்றது. முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அது குறித்து ஆதரவளிக்கும் கட்சிகளுடன் விவாதிப்பது தான் மரபு. ஆனால், இந்த விஷயம் குறித்து பா.ம.க.வுடன் திமுக அரசு கலந்து பேசவில்லை.

மாறாக இந்தத் திட்டம் குறித்து வெளியில் யாருக்கும் தெரியாமல் கலைஞரும், ஸ்டாலினும் கமுக்கமாக மறைத்து வைத்திருந்தனர் என்பது தான். முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை செயலராக இருந்த திமுக தலைமைக்கு நெருக்கமான ராமசுந்தரம் என்ற இ.ஆ.ப. அதிகாரி தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்கள் முன்பாக விருப்ப ஓய்வு பெற்று பெட்ரோலிய மண்டலத் திட்டத்தை செயல்படுத்தும் நாகார்ஜுனா உரம் மற்றும் இரசாயன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

அந்த நிறுவனத்திற்கு சாதகமாகவே இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பொதுப்பணித் துறை செயலராக  இருந்த இந்த அதிகாரிக்கு இத்திட்டம் குறித்து அப்போது தெரிந்த தகவல்கள் கூட பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த அண்ணன் துரைமுருகனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த திட்டம் குறித்து அப்போது பா.ம.க.வுக்கு தெரியவில்லை.

பெட்ரோலிய மண்டலம் குறித்து அப்போது தெரிந்திருந்தால் நிச்சயமாக கலைஞருக்கு அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தியிருப்போம். கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களை பாதிக்கும் திட்டங்களான துணை நகரத் திட்டம், தூத்துக்குடியில் டாட்டா டைட்டானியம் டையாக்சைடு திட்டத்திற்கு நிலங்களை பறிக்கும் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்காக அப்பாவி மக்களின் நிலங்களைப் பறிக்கும் திட்டம், சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கி திமுக தலைமைக்கு நெருக்கமான குடும்பத்திடம் ஒப்படைக்கும் திட்டம் ஆகியவற்றை முறியடித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு அப்போதே பெட்ரோலிய மண்டலத் திட்டத்தை முறியடிப்பது என்பது சாத்தியப்படாத சாதனை அல்ல.

அதிமுக செய்தித் தொடர்பாளராக பா.ம.க. செயல்படுகிறது என்று கூறியிருப்பதன் மூலம் அண்ணன் துரைமுருகன் அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணன் துரைமுருகன் கும்பகர்ண உறக்கத்திலிருந்து இப்போது தான் விழித்திருப்பதாலோ என்னவோ அவருக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை.

2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த நாளில் தொடங்கி இன்று வரை அதன் ஊழல்களை அன்றாடம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருவது பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை தமிழகம் அறியும். அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கைகளில் 80%-க்கும் மேற்பட்டவற்றை தான் அண்ணனின் செயல் தலைவர் காப்பியடித்து வெளியிட்டு வருகிறார் என்பதையும் மக்கள் அறிவார். தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பா.ம.க. தான் என்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்,

அதிமுகவை திமுக மட்டுமே எதிர்ப்பது போல அண்ணன் நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நோய்க்கு என்னிடம் மருந்து இல்லை. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்… 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக அரசுக்கு எதிராக பா.ம.க. வெளியிட்ட அறிக்கைகள், போராட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றின் பட்டியலை நான் தருகிறேன்.

திமுக வெளியிட்ட அறிக்கைகள், போராட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை அண்ணன் துரைமுருகன் கொண்டு வரட்டும்… இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்”

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.