டில்லி:

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘விவசாயிகள், இளைஞர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சாலைகள் என பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாஜக ஆட்சி 4 ஆண்டுகளை கடந்து விட்டது. விவசாயிகளுக்குள் நியாயமான விலை இல்லை, பட்ஜெட்டுடன் ஒத்துப்போகாத கவர்ச்சி திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.

அளிக்கப்பட்ட ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் வெளியேற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பது நமது அதிர்ஷ்டம். அவர்களுக்கு தேர்தல் மூலம் கதவுக்கு வழிகாட்டும் நேரம் வந்துவிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி கூறுகையில், ‘‘5 ஆண்டு கால ஆட்சிக்கு அவகாசம் இருந்த நிலையில் 2014&15ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டே தற்போதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அவர்கள் என்ன வழங்கியுள்ளார் என்பது மக்களுக்கு தெரியும்’’ என்றார்.