“நன்றிகெட்ட சமூகம்!” : தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (நிறைவு பகுதி)

a

 உங்கள் மீதான விமர்சனங்களும் பொதுவாழ்க்கையைவிட்டு ஓய்வு பெறுவதற்கான காரணங்களில் ஒன்றா?

ஏதோ ஆதாயத்துக்காக நான் செயல்பட்டதாய் சிலர் சமூகவலைதளங்களில் எழுதுகிறார்கள். குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை நான்தான் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியது போல சிலர் எழுதுகிறார்கள். சட்டமன்றத் தேர்தலில்கூட  திமுகவுடன் இசுலாமிய அமைப்புகள் சில கூட்டணி வைத்தன. இதே திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிதானே.

அதே போல அ.தி.மு.க.வும்,  ம.ந.கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வும் ம.தி.மு.க.வும்  பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த கட்சிகள்தானே!

நான் பொது நன்மை கருதியே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முடிவுகளை எடுத்தேன். தனிப்பட்ட ஆதாயம் என்று எதுவுமே என் வாழ்வில் கிடையாது.

என்னை  விமர்சிப்பவர்கள் எவருமே  என்னைப்போல நேர்மையாக வாழ முடியாவர்கள். அவர்கள் என் வீட்டில் பத்து நாட்கள் தங்கி, எனது வாழ்க்கை முறையைப் பார்க்கட்டும்.  என்னைப்போல வாழ முடியுமா என்று யோசிக்கட்டும்.

நாற்பது ஆண்டுகாலமாக  பொது வாழ்க்கையில் இருக்கிறேன். இன்றுவரை என் வீட்டுத் தேவைக்காக அரிசி பருப்பு வாங்க நான்தான் கடைகளுக்குச் சென்றுவருகிறேன். எங்கள் வீட்டில் வேலை ஆட்கள் கிடையாது.

எப்போதாவது பேச வாய்ப்பு கிடைத்து அதனால் கிடைக்கும் அன்பளிப்புகளையும் ஏழை மாணவர்கள் கல்விக்காக அளித்துவிடுகிறேன்.  எனக்கு கிடைக்கும் மாத ஒய்வூதியம் 19, 700 ரூபாய். அதிலும் ஏழை குழந்தைகளுக்கு உதவுகிறேன்.  மீதமுள்ள பணத்தில் நானும் என் மனைவியும் குடும்பத்தை ஓட்டுகிறோம்.

தவறு செய்து விமர்சனம் வந்தால் வேறு. ஆனால் தவறே செய்யாதபோது, தனது விருப்பு வெறுப்புக்காக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். இது வேதனை படுத்துகிறது.  பொது வாழ்வைவிட்டு நான் விலகுவதற்கான காரணங்களில் இந்த விமர்சனங்களும் ஒரு காரணம் என்பது உண்மையே.

உங்கள் காந்திய மக்கள் கட்சியில் உங்கள் விலகல் முடிவை எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

அவர்களுக்கு மிக வருத்தம்தான். எனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.  இல்லாவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம் என்றார்கள்.

ஆனால் எனது முடிவில் மாற்றமில்லை. “ கடந்த சட்டமன்றத் தேர்தலில் தொகுதிக்கு 200, 250 வாக்குகளாவது நமது இயக்கத்துக்கு கிடைத்தது என்றால், அதற்குக் காரணம் எனது இத்தனை வருட நேர்மயைான அரசியல்பணிதான். இப்போது நான் வாக்கு மாறி, மீண்டும் அரசியலுக்கு வந்தால் அந்த நம்பிக்கையும் பொய்த்துவிடும். என்னால் உங்களுக்குச் செய்ய முடிந்தது, நல்லதொரு இயக்கம் இது என்ற அடையாளத்தைத்தான். அந்த அடையாளமும் தொலைந்துவிடக்கூடாது. ஆகவே மறுபடி நான் அரசியலுக்கு வருவதால் உங்களுக்கும் எந்த பயனும் இல்லை” என்று கட்சியினரிடம் விளக்கினேன்.

 கட்சியினருக்கு உங்கள் வழிகாட்டல்..

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் ராசிபுரத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்று கூடுகிறார்கள். அடுத்த தலைவர் யார் என்பது அங்கே முடிவாகும். கட்சியனருக்கு நான் சொன்ன முக்கிய செய்தி என்னவெனறால், “தேர்தல் அரசியல் வேண்டாம். ஏழை மாணவர்கள்  படிக்க உதவுங்கள்,  நோயாளிகளுக்கு உதவுங்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள்.. ஆகாய தாமரை படர்ந்த குளங்களை சுத்தப்படுத்துங்கள்! இது போன்ற பணிகளை ஆரவாரமின்றி செய்து வாருங்கள் என்பதே.

தேர்தலில் கிடைத்த குறைந்த வாக்குகள்தான் உங்கள் மனதை மிகவும் பாதித்திருக்கிறது.  தேர்தலில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க.. இந்த தேர்தல் அமைப்பையே மாற்ற ஏதும் திட்டம் இல்லையா…?

ஜனநாயக அமைப்பிற்கு  தேர்தலே சிறந்த வழி. அதில் மாற்று என்பது கிடையாது.

நாற்பது வருட பொது வாழ்க்கையில் நமது சமுதாயம், மக்கள் பற்றி தங்களது கருத்து என்ன?

நன்றியற்ற சமூகம் இது. இந்த சமுகத்துக்காக நாம் அர்ப்பணித்துக்கொள்வதால்,  தவறான விமர்சனங்களும் வரும்.  இதுதான்  நமது நேர்மைக்கு கிடைக்கும் சம்பளம். 100 விழுக்காடு  நேர்மையாக நடப்பவனுக்கு இந்த மண்ணில் இடம் கிடையாது.

(நிறைவு)

பேட்டி: டி.வி.எஸ். சோமு https://www.facebook.com/reportersomu

Leave a Reply

Your email address will not be published.