வாக்களித்த மக்களுக்கு நன்றி: கமல்ஹாசன்

சென்னை:

தேர்தலில் தங்களது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக  கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், சென்னை மற்றும் ஒரு சில தொகுதிகளில் மட்டும் சொற்ப வாக்குகளை பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 90 சதவிகிதத்ததிற்கும் மேலான தொகுதிகளில் மிகக்குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளது. இதன் காரணமாக மக்கள் மன்றத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் ஒதுக்கப்பட்டு இருப்பது தெளிவாகி உள்ளது.

இந்த நிலையில், தங்களது கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார் கமல் ஹாசன்,  எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர்,  வாக்களித்த மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளர்.

மேலும்,  பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம் என்று தெரிவித்து உள்ளவர், தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை என்றும்,  பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே சாதனை தான், நேர்மைக்கு நாங்கள் தான் “ஏ” டீம்.

தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது, வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.  தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு என்றும் விவசாயத்திற்கு பாதிப்பு இல்லாத திட்டங்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தின் எழுச்சியே எங்கள் இலக்கு. விவசாயிகளுக்கு எதிரான திட்டம் கூடாது. தேர்தல் வரும் போகும். ஆனால், எங்கள் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சியே ஆகும்.

நேர்மையாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படிதான், நான்  மக்களை வழி நடத்துவேன். நம் கட்சி தொண்டர்களும் அப்படிதான் செயல்பட்டனர். இன்று தமிழகத்தில் மூன்றாவது இடம் மாற்று என மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுள்ளது. இன்னும் அயராது பாடுபடும்.

நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு  நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றுள்ளோம். மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக கருத வேண்டும். அரசியலை நான் தொழிலாக நினைக்கவில்லை. தொழிலாக நினைத்தால் அது மாபெரும் தவறு.

14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓட விட்டுள்ளனர். மக்களின் வாக்குகள், நாங்கள் நேர்மையான வழியில் பயணித்து பணிகளை மேற்கொள்ள மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.  தமிழக மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி