அன்று ராஜீவ் காந்தி ஜனநாயகத்தைப் பரவலாக்கினார், ஆனால் இன்று நடப்பதோ..? – உத்தவ் தாக்கரே சாடல்!

மும்பை: நாட்டின் அனைத்துவித அதிகாரங்களும், ஒரே நபரின் கைகளில் குவிக்கப்படுகிறது என்று மோடி அரசின் செயலை மறைமுகமாக சுட்டிக் காட்டினார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே. மேலும், ராஜீவ் காந்தி கொண்டுவந்த ‘பஞ்சாயத்து ராஜ்’ என்ற ஜனநாயகப் பரவலுக்கான நடவடிக்கையையும் அவர் புகழ்ந்துரைத்தார்.

நாட்டிலுள்ள எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட வீடியோ கான்ஃபரன்ஸ் நிகழ்ச்சியில் பேசுகையில் இதைத் தெரிவித்தார் உத்தவ்.

அவர் கூறியதாவது, “முந்தைய வரி விதிப்பு முறைக்கும், தற்போதைய வரிவிதிப்பு(ஜிஎஸ்டி) முறைக்கும் இடையே, ஒரு நடுவழிப் பாதையை பின்பற்றுவது குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சிறிய நிறுவனங்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையிலான பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கொண்டுவந்தார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இன்று நடப்பது என்ன? அனைத்து அதிகாரங்களும் ஒருவரின் கைகளுக்கே செல்கிறது. எனவே, மாநில அரசு என்பதற்கான அர்த்தம்தான் என்ன?

இந்த நாட்டில் மாநில அரசு என்பதற்கான தேவை எதிர்காலத்தில் இருக்குமா? மற்றும் இந்த நாட்டை ஒரு மனிதர் மட்டுமே ஆட்சிசெய்து, நாமெல்லாம் தலையை மட்டுமே ஆட்டிக் கொண்டிருப்போமா? ஆனால், அது நடப்பதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்.

டாக்டர்.அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டத்தை மதிக்கவில்லை என்றால், அதில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மதிக்கப்படவில்லை என்றால், இங்கே ஜனநாயகம் எப்படி இருக்கும்?” என்று பேசினார் உத்தவ் தாக்கரே.