அப்போது இஸ்லாமிய விரோதி.. இப்போது இந்து விரோதி: தவறான விமர்சனங்களுக்கு ஆளாகும் விஜய்

விஜய் நடித்த “மெர்சல்” படத்துக்கு இந்துத்துவ கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய பாஜக அரசின் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நவடக்கைகளை இப்படத்தில் விமர்சனம் செய்திருப்பதாகவும், அது குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அக்காட்சிகளை நீக்குவதாக மத்திய அமைச்சர் பொன்.ரா.விடம் படத்தின் தயாரிப்பாளர், தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தவிர, , “மெர்சல் படத்தில் கோவில்களுக்கு பதிலாக மருத்துவமனை கட்டுங்கள் என்று ஜோசப் விஜய் சொல்கிறார்” என்று விஜய்யை மத ரீதியாக விமர்சிக்கின்றனர் பாஜக தலைவர்கள்.

இது குறித்து நடிகர் விஜய் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இதே போல ஏற்கெனவே சிக்கலை சந்தித்தார் விஜய். அவர் நடித்த துப்பாக்கி படத்தை வைத்தும் சர்ச்சை எழுந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இஸ்லாமிய அமைப்பினர் சிலர்.

இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் “துப்பாக்கி” படத்தில் இருப்பதாகவும், அதை நீக்கக் கோரியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு அமைப்பினர், விஜய்யின் வீட்டை முற்றுகையிடவும் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சென்னையில் இந்தப் படம் வெளியான தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் விஜய்யின் வீட்டுக்கும், அவரது தந்தை வசிக்கும் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும்  தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலை நேரில் சந்தித்து இந்தப் படம் ஓடும் அனைத்துத் தியேட்டர்களுக்கும், தங்களது வீட்டுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள இஸ்லாமியர்கள் தொடர்பான காட்சிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். விஜய்யுடன் சென்ற படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவும் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார்.

இப்போது, இந்து அமைப்பினரும், இந்து அமைப்பினரும் விஜய்யின் மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவர்களது ரசிகர்களோ, “நடிகர் விஜய்யை பொறுத்தவரை தன்னை  குறிப்பிட்ட எந்தவொரு மதம் சார்ந்தவராகவும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. ஆனால் மதத்துக்கு எதிரானவர் என்று அவரை விமர்சிக்கும் போக்கு தொடர்கிறது. இது வருத்தத்துக்குரிய விசயமே” என்று ஆதங்கப்படுகிறார்கள்.