புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருந்தது. இந் நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தமது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தார்.

இதையடுத்து, தற்போது புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். அவரும் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் 3 திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது ஒருவர் ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியலில் அடுத்தடுத்த திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருக்க, தற்போது, கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏ ஒருவரும் ராஜினாமா செய்ததால் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது.