பழனி: பழனி முருகன் கோயிலில் 10நாள் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (22ந்தேதி)  தொடங்கியது. வரும் 31ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு தெப்பத் தோரோட்ட வைபமும், அதைத் தொடர்ந்து அன்றிரவு 11 மணியளவில் திருக்கொடியிறக்குதல் வைபவமும் நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  பழனி மலையடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள கொடிகட்ட மண்டபத்தில் கொடியேற்றப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வரும் ஜனவரி 28ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், நாள்தோறும் வள்ளி தேவசேனா சமேதராக முத்துக்குமார சுவாமி, தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு என பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஜனவரி 27ஆம் தேதியன்று இரவு 7:30 மணியளவில், பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடர்ந்து இரவு 9:30 மணியளவில் வெள்ளித் தேர் உலா வைபவமும் நடைபெற உள்ளது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வரும் ஜனவரி 28ஆம் தேதியன்று மாலை 4:30 மணியளவில் தேரடியில் தொடங்குகிறது.

தைப்பூச திருவிழாவின் நிறைவாக வரும் ஜனவரி 31ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு தெப்பத் தோரோட்ட வைபமும், அதைத் தொடர்ந்து அன்றிரவு 11 மணியளவில் திருக்கொடியிறக்குதல் வைபவமும் நடைபெற உள்ளது.

தற்போது கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்துவிட்டாலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி விழா நடைபெறும் நாட்களில், அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெறும் பக்தி சொற்பொழிவு, பரத நாட்டியம், பட்டி மன்றம், பக்தி இன்னிசை போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பழனிக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தேவர் சிலை, திருஆவினன்குடி, சன்னதி ரோடு, பாதவிநாயகர் கோவில், குடமுழுக்கு மண்டபம் வழியாக யானைப்பாதையில் செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருபவர்கள், படிப்பாதை, பாதவிநாயகர் கோவில், கௌரிகிருஷ்ணா சந்திப்பு, அய்யம்புள்ளி சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

பக்தர்கள் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக குடமுழுக்கு மண்டபம், கிரிவல வீதி, சன்னதி சாலை மற்றும் யானைப்பாதையில் பதினோறு இடங்களில், பக்தர்களை நிறுத்தி குழுவாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் சிறப்பு கட்டுப்பாட்டு அறை, பழநியாண்டவர் கலைக்கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.