திண்டுக்கல்:
கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. பைன் மரக்காடுகள், குணா குகை , தூண் பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், கடந்த 13-ந்தேதி மாலை முதலே வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். குறிப்பாக ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் வந்ததால் கொடைக்கானல் நகரமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது.

இதைத்தொடர்ந்து கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் வெள்ளி நீர்வீழ்ச்சி, ஏரிச்சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்து நின்றன.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் மரக்காடு, ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் எங்கும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.