சென்னை: கொரோனா தடுப்பூசி 2-வது ‘டோஸ்’ போடும் பணி  சென்னையில் இன்று தொடங்குவதாக சென்னை  மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி ஜனவரி 16ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேர் வீதம் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்தன.

தமிழகத்தில் இதுவரை   தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2,27,340  ஆக உயர்நதுள்ளது. நேற்று ஒரே நாளில், 15,856 (கோவிஷீல்டு – 10,210) (கோவாக்ஸின் -3,137) இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குவதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் டெங்கு முதலான தொற்று நோய்கள் குறித்த ஆய்வு க்கூட்டம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில்  ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையர் திவ்யதர்ஷினி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து மாவட்ட அளவிலான 3-வது கட்ட ஆய்வு கூட்டம் நேற்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ்,  சென்னையில் இதுவரை 33 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், அதில், இதுவரை  யாருக்கும் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டு, அடுத்த 28 நாட்கள் கழித்து 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட வேண்டும். அந்தவகையில் நாளை (இன்று) முதல் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கிறது. தினமும் சென்னையில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்துவதற்கு எல்லாவித நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை  தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முன்களப் பணியாளர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறுபவர்கள் பொதுமக்களுக்கு, தடுப்பூசி போட்டப்பிறகே போடும் வாய்ப்பை பெற நேரிடும். எனவே  வாய்ப்பை தவறவிட்ட சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் உடனே  தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட  சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது என்றார். மேலும்,    சென்னை மாநகராட்சியில்  20 லட்சம் தடுப்பு மருந்துகள் உள்ளன என்றும்,  சென்னையில் இதுவரை 60 தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் 50 முதல் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும், சென்னையில்  இதுவரை 128 இடங்களில் வெற்றிகரமாக அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.