சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக, 4 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி உள்ளது.  அதில் 7 மாடிகளைக் கொண்ட நீதிமன்ற வளாகம் கட்டப் படும் என தெரிகிறது.

சென்னை பாரிமுனையில் ஆங்கிலேயர்களால் 1891-ல் தொடங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வருகிறது. இது இந்தியாவின் இரண்டாவது தொன்மையான கல்லூரி என்ற பெருமைக்குரியது. இந்த வளாகத்தில், சிவில் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட, 70 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும் இங்கு சட்டக்கல்லூரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்த சட்டக்கல்லூரியில் கடந்த 2008-ம் ஆண்டு  வெடித்த ஜாதிய ரீதியிலான  திடீர் வன்முறை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, விசாரணை நடத்திய  நீதிபதி சண்முகம் ஆணையம், கல்லூரியை உயர்நிதி மன்ற வளாகத்தில் இருந்து இடம் மாற்ற பரிந்துரைத்தது.

மேலும், இக்கல்லூரியின் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு 2-ஆகப் பிரிக் கப்பட்டு, சென்னைக்கு வெளியே காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூரிலும் ரூ.117 கோடி செலவில் 2 பிரம்மாண்ட கல்லூரிகளாக கட்டப்பட்டு, நடைமுறைக்கு வந்துளளது.

இந்த நிலையில, சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்கு,  விசாரணைக்காக, வரும் வெளிமாவட்ட மக்கள், போலீசார், வழக்கறிஞர்கள் தங்க போதுமான வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. மேலும், நீதிமன்றங்கள் தனித் தனியாக இயங்குவதற்கு  போதுமான வசதி இல்லை. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில்,  ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என, சட்டத் துறை வாயிலாக, அரசிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு, தமிழகஅரசு 194 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் வாயிலாக 7 மாடிகளைக் கொண்ட நீதிமன்ற வளாகம் கட்டும் பணிகள்  விரைவில்  மேற்கொள்ளப்பட உள்ளன

இதற்காக, சட்டக்கல்லுாரி இயங்கி வந்த, 4 ஏக்கர் நிலம், அரசிடம் இருந்து, உயர் நீதிமன்ற நிர்வாகத் திடம், விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி மற்றும் பதிவாளர் முன்னிலையில், முறைப்படி, இந்த நிலத்தை முதல்வர் எடப்பாடி விரைவில் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.