ராமேஸ்வரம்:

ப்துல் கலாமின் இரண்டாவது  நினைவு நாளான ஜூலை 27ந்தேதி அவரது நினைவு மண்டபம், மற்றும் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தேசிய நினைவகப்பணிகள் முழுமையாக நிறைவுபெறாத நிலையில் அப்போது திறந்து வைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. அதையடுத்து வரும் ஜனவரி முதல் அப்துல் கலாம் தேசிய நினைவகம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ல் இயற்கை எய்தினார். மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் உயிரிழந்த டாக்டர் கலாமின் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் ராமேஸ்வரம் அருகேயுள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ‘அப்துல்கலாம் தேசிய நினைவகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தின் உள்ளே கலாமின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஓவியங்கள், போட்டோக்கள், சிற்பங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், கண்டுபிடித்த மாதிரிகள் என எண்ணற்ற பொருள்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன் நினைவகத்தின் நுழைவு பகுதியில் கலாம் வீணை வாசித்தபடி அமர்ந்திருக்கும் வெண்கல சிலையும் உள்ளது. முழுமையாக பணிகள் முடியாத நிலையில் கலாம் நினைவிடத்தின் 4 பக்கங்களிலும் உள்ள காட்சி கூடங்களுக்குள் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.

இந்த காட்சி கூடங்களில் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவ சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அங்கு தொடர்ந்து நடந்து வந்தன. தற்போது இந்த பணிகள் நிறைவடையும் நிலையினை எட்டியுள்ளது.

இதையடுத்து வரும் ஜனவரி மாதம் முதல் டாக்டர் அப்துல்கலாம் நினைவகத்தினை முழுமையாக பார்வையிட பொதுமக்கள் அனுமதிகப்பட உள்ளனர்.