அதிமுக அரசு மக்களை விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டது! திருநாவுக்கரசர்

சென்னை,

திமுக அரசு மக்களை விட்டு வெகுதூரம் விலகி சென்றுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

இந்திரா காந்தியின் 33-ஆவது நினைவு நாள் , சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவர்களது படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர்சர் தலைவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் உலக அளவில் இந்தியா பேசப்பட்டது. ஆனால், இன்று மத்தியில் ஆளும் பாஜக அரசும் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் மக்கள் விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன.

வடகிழக்குப் பருவமழை தொடர்பாக எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க வில்லை. முதல்வரும் அமைச்சர்களும் உள்கட்சிப் பிரச்னையைத் தீர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

நியாயவிலைக் கடைகளில் சர்க்கரைக்கான விலை உயர்வு, ஊழல், வரிச்சுமை, கந்து வட்டிக் கொடுமை பாதிப்பு போன்றவை காரணமாக அதிமுக அரசு மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்புக் குறைந்துவிட்டதாக அரசு கூறி வருவது கண்டிக்கத்தக்கது. தற்போது வரை டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

மத்திய அரசுக்கு எதிராக  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவ.8-ம் தேதியைக் கருப்பு தினமாக கடைப்பிடிக்க உள்ளோம். இதையொட்டி, காங்கிரஸ் சார்பில் நவ. 4-ம் தேதி வேலூரிலும் நவ.19-ம் தேதி கோவையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதில், காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.