இடைத்தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது! கே.எஸ்.அழகிரி

சென்னை :

டைத்தேர்தலில் பெற்ற அதிமுகவின் வெற்றி, மக்களால்  வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்று தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகார பலம், பண பலம் கூடுதலாகவே இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிற தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது.

பொதுவாக, இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சமநிலைத் தன்மை (Level Playing Field) இல்லாத நிலை இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரபலம், பணபலம் கூடுதலாகவே இருக்கிறது. இதை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாத நிலையில் தான் இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்று விடுகிறது. இத்தகைய வெற்றிகள் மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிப்பதாக கருத முடியாது. இடைத் தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எனவே, இடைத் தேர்தல்களில் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை காங்கிரஸ் கட்சியினரும், தமிழக மக்களும் புரிந்து கொள்வார்கள். 2016 நாங்குநேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திரு. எச். வசந்தகுமார் 17,315 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் 34,710 வாக்குகள் கூடுதலாக கிடைத்தது.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மிக சாதகமான சூழல் அமைந்திருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் திரு. ரூபி R.மனோகரன் அமோக ஆதரவுடன் வெற்றி பெறுவார் என அனைவருடைய எதிர்ப்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்பதை கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

கடுமையான சூழலில் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடுவதற்கு துணிவுடன் முன்வந்து வேட்பாளராக போட்டியிட்ட திரு. ரூபி R.மனோகரன் அவர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் தோழர்களும், தோழமை கட்சியினரும் இமைப்பொழுதும் சோராதிருந்து கடுமையாக உழைத்தனர். அதேபோன்று, காங்கிரஸ் வேட்பாளருக்கு மிகக் கடுமையாக உழைத்த தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சியினருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.