கொரோனா ஊரடங்கு தோல்வி, அடுத்த திட்டம் என்ன? மோடி அரசுக்கு ராகுல் கேள்வி

டெல்லி:

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த திட்டம் என்ன என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் நாட்டில் உள்ள தொழில்கள் முடங்கிய நிலையில், இந்திய பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்றுள்ளது. மேலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க தவறியதால், அடுத்த வேளை உணவுக்கே திண்டாடிய  ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் கண்ணீருடன் தங்களது சொந்த ஊருக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில்,   நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி பொதுமக்கள், செய்தியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் போன்று பலரை சந்தித்து பேசி வருகிறார். மேலும் பொதுமக்களையும், புலம்பெயர் தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார்.

அதைத்தொடர்ந்து,  இன்று (26-5-2020)  காணொளி காட்சி மூலம் கருத்து தெரிவித்த ராகுல்காந்தி,  இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் என்ன காரணத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதோ அது முழுமையாக  தோல்வி அடைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஊரடங்கின் நோக்கம் மற்றும் குறிக்கோள் போன்றவை தற்போது  நாடு சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகள், பொது முடக்கம் தோல்வி அடைந்ததையே எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்தையும் திறந்து விடும் அளவுக்கு வந்திருக்கிறோம். இது ஊரடங்கின் குறிக்கோள் மற்றும் நோக்கத்தின் தோல்வியே.

மோடி அரசு முதலில்  21 நாளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என நம்மிடம் தெரிவித்தது.  ஆனால்  60 நாட்களை கடந்தும் தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்தத கடன் திட்டங்கள், வெறும் திட்டங்களாகவே உள்ளது…   மக்களுக்கு உடனே தேவை நிதிதான், கடன் அல்ல…

கொரோனாவை முழுமையாக நீக்குவதற்கு மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன?

பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கவும்  நிதியுதவி அளிக்கவும்  சிறு குறு தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய வேண்டும்,

எல்லையில் என்ன பிரச்சினை,  அங்கு என்ன நடந்தது,  எப்படி நடந்தது என்பது குறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும்,

நேபாளம்,  லடாக்கில் என்ன நடந்தது எப்படி என்பது குறித்தும்  தெளிவாக விளக்க வேண்டும்”

இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.