சென்னை:

காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்க நாளை (ஏப்ரல் 5) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உச்சநீதி மன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசு மற்றும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசு மீதும் குற்றச்சாட்டுக்களை கூறிய எதிர்க்கட்சி தலைவர் கடந்த 1ந்தேதி அனைத்துக்கட்சி தலைவர்களை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து அன்றே போராட்டத்தில் குதித்தனர். இன்று 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவிரி பிரச்சினை  குறித்து ஆலோசிக்க நாளை (ஏப்ரல் 5) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாளை திமுக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆளும் அதிமுக கட்சி தவிர ஏனைய கட்சிகளும், வணிகர் சங்கங்களும், போக்குவரத்து தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்நிலையில், நாளை  முழு அடைப்பை நடத்திய உடன் அடுத்தகட்ட போராட்டம்  குறித்து திட்டமிட நாளை (5-ம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரி மீட்பு பயணம் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.