இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு அலை: வடகிழக்கு மாநிலங்களிலாவது  வசந்தம் வீசுமா?

புதுடெல்லி:

இந்தி பேசும் வட மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை முற்றிலும் இழந்துள்ள நிலையில், அக்கட்சி வளர்ந்து வரும் கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் சிக்கல் ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வரும் மக்களவை தேர்தலில் கிழக்கு, தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெறலாம் என்று பாஜக கருதுகிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் ஏற்படப் போகும் இழப்பை, இந்த மாநிலங்களில் கிடைக்கும் வெற்றியில் சரி கட்டி விடலாம் என்பது அக்கட்சியின் கணக்காக உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, இந்தி பேசும் மாநிலங்களில் பெரும் வெற்றியை பெற்றது.

ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், சண்டிகார் மற்றும் டில்லி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 226 மக்களவை தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில், சத்தீஸ்கர்,மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான அலை மற்றும் விவசாயிகள் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதேபோன்ற எதிர்ப்பு அலையை மற்ற வட மாநிலங்களிலும் பாஜக எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு போல், மோடி அலை இப்போது இல்லாததால், இந்தி பேசும் வட மாநிலங்களில் பாஜக பெரும் தோல்வியை சந்திக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்திருப்பதால், கடந்த முறை பெற்ற வெற்றியிலிருந்து பாதி வெற்றியை மட்டுமே பாஜக பெற முடியும்.

எனினும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக பெற்ற வளர்ச்சி, மற்ற மாநிலங்களில் தரும் தோல்வியை ஈடு செய்யும் என அக்கட்சி நம்புகிறது.

ஒடிஷா, மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா,மணிப்பூர், மிஜோரம், நாகாலந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் மொத்தம் 88 மக்களவை தொகுதிகள் உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

வடகிழக்கு மாநிலங்களைப் பொருத்தவரை,சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே கோலோச்சி வருகிறது. பாஜகவுக்கு பெரிய செல்வாக்கு ஏதும் இல்லை.

இப்பகுதியில் அமைப்பு ரீதியாக பாஜகவுக்கு இல்லை என்றாலும், அங்குள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக வளர்ந்து வருகிறது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்ததால், வடகிழக்கு மாநிலங்களில் பாஜக மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது
அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கி போராடினர்.

அசாம் கன பரிஷத் போன்ற பாஜகவின் தோழமை கட்சிகள் எல்லாம், கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டன.

இருந்தாலும், செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் மாநிலக் கட்சிகளை வைத்துக் கொண்டு பெரும் வெற்றியை பெறலாம் என பாஜக போடும் கணக்கு சரியா? தவறா ? என தேர்தல் தான் முடிவு செய்யும்.