சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறி வாளன் உள்பட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 7ந்தேதி மனிதசங்கிலி போராட் டம் நடைபெறும் என்றும், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்  அறிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்து வரும், பேரறிவாளன் உள்பட 7 பேரை யும் விடுதலை செய்வது குறித்து மாநில கவர்னர் முடிவு எடுக்கலாம் என உச்சநீதி மன்றம் அறிவித்து விட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, கவர்னர் பன்வாரிலாலுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், கவர்னர் இதில் சட்டச்சிக்கல் உள்ளது என்று குறித்து, அவர்களின் விடுதலைக்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி மக்களின் ஆதரவை கோரி வருகிறார். கடந்த மாதம் 24ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு கோரியும், அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இந்த நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில்  தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  மார்ச் 9-ம் தேதி தமிழகம் முழுவதும்  சென்னை, மதுரை, கோவை,திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை உள்ளிட்ட நகரங்களில்  அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி,  திரைத்துறையினர், மாணவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கங்கள் என்று அனைவரும் பங்கேற்கும் நிகழ்வாக இந்த மனித சங்கிலி போராட்டம் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.