விவசாயிகளை தாக்கி காந்தி ஜெயந்தியை கொண்டாடும் பாஜக: ராகுல் கண்டனம்

டில்லி:

கிம்சை வழியில் போராடிய காந்தி பிறந்தநாளில், விவசாயிகள் மீது பாஜகவினர் கொடூர தாக்குதல் நடத்தி கொண்டாடி உள்ளனர் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அனைத்துலக வன்முறையற்ற நாளான இன்று விவசாயிகளை பாஜக கொடூரமான முறையில் தாக்கியுள்ளது என குற்றம் சாட்டி உள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வத்து சுமார் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள்  ‘கிஷான் காந்த் யாத்ரா’ என்ற பெயரில் உத்தர காண்டில் இருந்து டில்லி ராஜ்காட் நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் பேரணியை டில்லிக்குள் நுழையாதவாறு, உத்தரபிரதேசம் – டில்லி எல்லையில்  காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு பேரணியாக டில்லிக்குள் முன்னேறினர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறை யினர் முயற்சி தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் பேரணி மேலும் முன்னேறாதவாறு, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி களேபரமானது. வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.

விவசாயிகள் பேரணி – டில்லி

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மோடி அரசின் இந்த அராஜக செயலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில்,  “அனைத்துலக வன்முறையற்ற நாளில், டில்லிக்கு அமைதியான முறையில் வந்த விவசாயிகளை கொடூரமாக தாக்கி பாஜக-வினர் காந்தி ஜெயந்தியை கொண்டாடுகின்றனர்.

இப்போது தங்களுடைய குறையை தெரிவிக்க விவசாயிகள் கூட டெல்லிக்கு வரமுடியாது,” என குறிப்பிட்டுள்ளார்.