ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

மீப காலமாக பட்டாசுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டும் பட்டாசுகளை இனி ஆன்லைனில் விற்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பட்டாசு தேவையை தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம்தான் பெருமளவில் தீர்த்து வைக்கிறது. விருதுநகர், சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள ஏராளமான கிராமங் களில் பட்டாசு தொழில் குடிசை தொழிலாக நடைபெற்ற வருகிறது.

தற்போது கால மாற்றத்திற்கு ஏற்ப, பட்டாசுகளை நேரில் சென்று வாங்குவதை விரும்பாத  இன்றைய இளைஞர்கள்,  மற்ற பொருட்களை வாங்குவதுபோலவே பட்டாசுகளையும் ஆன் லைன் மூலமே வாங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் விற்பனை அதிகரித்து வந்தது. இந்த நிலையில்,  ஆன்லைன் பட்டாசுகளால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று பட்டாசு விற்பனையாளர் சங்கத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிபதி, ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், ஆன்லைனில் விற்பனையாகும் பட்டாசுகள் கொரியரில் அனுப்பும்போது கடைப் பிடிக்கும் விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்க வேண்டும் என்றும் வெடிபொருள் கட்டுப் பாட்டு அதிகாரி 15 ஆம் தேதிக்குள் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

உயர்நீதி மன்றத்தின் உத்தரவு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.