தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை:

சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாலைகளை ஆக்கிரமித்து  பேனர்கள் வைக்கப்படுவதால், மக்கள் நடந்து செல்ல சிரமப்படு கிறார்கள் என்றும், பேனர்கள் வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், பேனர் விவகாரம் குறித்து சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு நெறிமுறைகளை ஏற்படுத்தி, தமிழக அரசை நடைமுறைப்படுத்த கூறியிருந்தது.

அனால், பேனர் விவகாரத்தில் தமிழகஅரசு மெத்தனமாக நடந்துகொண்டதால், மீண்டும் தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரம் சூடுபிடித்தது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிமுறைகளை மீறியும் அனுமதி இல்லாமலும் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், ஆனால் யாரும் கைது செய்யப்படவோ, வழக்கு பதிவு செய்யப்படவோ இல்லை என்று கூறியது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கடந்த 2006 முதல் 12 ஆண்டுகளாக சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள், தீர்ப்பு களைப் பிறப்பித்துள்ளோம், ஆனால் அவற்றை அதிகாரிகள் செயல்படுத்த வில்லை என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத அதிகாரிகள், வேலையை உதறிவிட்டு கட்சியில் சென்று பணியாற்றுகள் என்று கடுமையாக சாடினர்.

இந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையை தொடர்ந்து,  சட்ட விரோத மாக சாலைகளில்  பேனர்கள் வைப்பதில், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே அளவுகோலை பின்பற்றுகின்றன என்ற நீதிபதிகள்,  சாலையில் வைக்கப்படும் பேனர்களை எந்த இடத்தில் அச்சடிக்கப்பட்டது, எந்த தேதியில் வைக்கப்பட்டது, என்ற விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும்,  வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்தால் உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பதை ஏற்க முடியாது என்ற நீதிபதிகள்,

உயர்நீதி மன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை வாகன ஓட்டிகளுக்கு  இடையூறு ஏற்படும் வகையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட யாரும் பேனர் வைக்க கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.