கொப்பரைக்கான ஆதார விலை கிலோவுக்கு, 130 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் – கொப்பரை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி:
கொப்பரைக்கான ஆதார விலை கிலோவுக்கு, 130 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான், வெளிமார்க்கெட்டில் ‘சிண்டிகேட்’ அமைத்து விலை சரிவு ஏற்படுவதை தடுக்க முடியும், என, மத்திய, மாநில அரசுகளை தென்னை விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தென்னை விவசாயிகள், தேங்காய் மட்டுமின்றி கொப்பரை உற்பத்தி, இளநீர் என, பல்வேறு மதிப்பு கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்கிறனர். பெரும்பாலான விவசாயிகள், தேங்காய் விற்பனையில் நேரடியாக ஈடுபடாமல், கொப்பரை உற்பத்தி செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை சரிவதும், தொடர்ந்து கொப்பரை உற்பத்தியை நிறுத்துவதும் வழக்கமாகி விட்டது.இதை சீராக்கும் வகையில், கொப்பரைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் விளைவாக, கொப்பரை ஆதார விலையாக, கிலோவுக்கு, 99.60 ரூபாய் என, மத்திய அரசு விலை நிர்ணயம் செய்தது. ஆனால், கொப்பரைக்கு, 130 ரூபாய் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தற்போது, கொப்பரை விலை படிப்படியாக அதிகரித்து, கிலோ, 132 ரூபாயை தொட்டுள்ளது.

இந்த விலை மேலும் உயர்ந்து, 140 ரூபாயை தொடும் என, உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், கொப்பரை கிலோவுக்கு, 130 ரூபாய் ஆதார விலையாக நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான், வெளிமார்க்கெட்டில் விலை வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க முடியும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோளாக விடுத்துள்ளனர். கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:காங்கேயம் மார்க்கெட்டில், இந்தாண்டு கொப்பரை கிலோவுக்கு குறைந்த பட்சமாக, 100 ரூபாய்; அதிகபட்சமாக தற்போது, 132 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தற்போதைய தேங்காய் வரத்து, கொப்பரை உற்பத்தி, விற்பனை போன்றவற்றை கணக்கிடும் போது, கொப்பரை விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது. அதனால், கொப்பரை ஆதார விலையாக கிலோவுக்கு, 130 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான், வெளிமார்க்கெட்டில் ‘சிண்டிகேட்’ அமைத்து விலை சரிவை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியும். கொப்பரைக்கான ஆதார விலையை கிலோவுக்கு, 125 ரூபாயாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வரும், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு, வேளாண் விற்பனை சந்தை மற்றும் தென்னை சாகுபடியிலுள்ள செலவு விபரங்களை கணக்கிட்டு, உற்பத்தி செலவுக்கு ஏற்ப ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.