Random image

போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன்: மகிளா காங்கிரசார் மோதல்!

 

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸாரிடையே இன்று கடும் மோதல் நடந்தது.

“நக்மா அணி, குஷ்பு அணி, மாநில மகளிர் காங்கிரஸ் அணி, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா என பல அணிகள் செயல்படுகின்றன.

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த விஜயதாரணிக்கு பதிலாக, முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது பதவியைக் கைப்பற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களில் நக்மாவின் ஆதரவாளர் ஹசீனாவும் ஒருவராவார்” என்று சத்தியமூர்த்திபவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில் இன்று சத்திய மூர்த்தி பவனுக்கு வந்த மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஹசீனா ஆதரவாளர்கள் கடுமையாக பேசவே, ஜான்சிராணி ஆத்திரமடைந்தார். அவரும் பதிலுக்கு கடுமையாக பேசினார்.

இந்த சூழலில் இரு தரப்பினருக்கும் வார்த்தை தடித்து கைகலப்பு ஏற்பட்டது.  இதில் ஜான்சிராணிக்கு கடுமையான அடி விழுந்தது. மகளிருக்கிடையே நடந்த இந்த மோதலில் திடீரென ஆண்களும் களம் இறங்கினர். ஜான்சிராணியை சிலர் சுற்றிவளைத்துத் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

 

தாக்குதலில் ஈடுபட்ட ய மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் அசீனா சையத்தின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மோதல் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, :பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.