‘சிறந்த அரசியல் தலைவர் கருணாநிதி’ சோனியா பிறந்தநாள் வாழ்த்து!

டில்லி,

94வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

நாட்டின் சிறந்த தலைவர் கருணநிதி என்றும்,  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் முக்கிய பங்காற்றுபவர் என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் ஜூன் 3ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அத்துடன் கருணாநிதி எம்எல்ஏவாக சட்டசபையின்  60 ஆண்டுகள் நிறைவடையும் வைரவிழாவும் கொண்டாட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

நாளை மறுநாள் சென்னை,  ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, லாலுபிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட வடமாநில தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,  நாட்டின் சிறந்த அரசியல் தலைவர் கருணாநிதி,  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் முக்கிய பங்காற்றுபவர் கருணாநிதி என்று பாராட்டி உள்ளார்.

மேலும் தமிழக வளர்ச்சிக்காக ஓய்வறியாசூது பணியாற்றியவர் என்றும், பலமுறை காங்கிரஸ் கட்சிக்கு கருணாநிதி ஆதரவளித்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

48 ஆண்டுகள் கட்சியை திறம்பட வழி நடத்தியவர் கருணாநிதி, அவர் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.