டில்லி:

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அன்று குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதன்முறையாக பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

58 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், காங்கிரஸ் செயற்குழு குஜராத் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து, காந்தி நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளத்தை கண்டு காங்கிரஸ் தலைவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்த பிரமாணட பொதுக்கூட்டத்தில்,  உ.பி. மாநிலம் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதன்முறையாக உரையாற்றி னார்.

பிரியங்கா இதற்கு முன்பு சகோதரர் ராகுல் காந்திக்காகவும், தாயார் சோனியா காந்திக்காகவும் மட்டுமே அவர்களது தொகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தார். ஆனால், தற்போது  அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த நிலையில், இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் தான் அவரது முதல் அரசியல் பொதுக்கூட்டம். இதில் பேசிய பிரியங்கா மோடியையும், பாஜக அரசையும் கடுமையாக சாடினார்.

அவர் பேசியதாவது,  இந்த நாடு அன்பு, இணக்கம், மற்றும் சகோதரத்தால் உருவாக்கப் பட்டது. நம்மிடம்  ஒற்றுமையும், சகோதரத்துவமும்  நீடிக்க வேண்டும்… ஆனால், மோடி ஆட்சியில், நாம் அதை இழந்து வருகிறோம்… நாட்டில் தறபோது மிக மோசமான விஷயங்கள் நடந்து வருகிறது.

‘மோடி அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 2 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே? எல்லா இந்தியர்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறியது என்ன ஆனது? வாக்குதான் ஒவ்வொரு வாக்காளரின் ஆயுதம். நமது நாட்டின் தன்னிச்சையான அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன.

பாஜக அரசு நாட்டு மக்களிடையே வன்மத்தை விதைத்து, வெறுப்பை உமிழ்ந்து  வருகிறது… இந்த நேரத்தில் நமக்கு நாட்டை காப்பதை விட வேறு வேலை இல்லை. இதற்காக நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பொதுமக்களை பார்த்து அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா, மக்களை நோக்கி, நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிப்பதன் மூலம், நீங்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறீர்கள். தற்போதைய சூழலில் தேவை யில்லாத பிரச்னைகளில் கவனத்தை செலுத்த வேண்டாம்….சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். உங்களுடைய வாக்கு ஒரு ஆயுதம் போன்றது. இந்த  ஆயுதம்  யாருக்கும் தீங்கு விளைவிக்காது… அதனால் நாட்டை மட்டுமே பாதுகாக்க முடியும் என்றார்.

உங்கள் ஆயுதத்தின் (வாக்கு) பயனாக கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து நீங்கள் உணர வேண்டும் என்றவர், வேலையில்லாதவர்களுக்க  எப்படி வேலை கிடைக்கும், பெண்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை நீங்கள் உணர வேண்டும்… நீங்கள் யோசித்து  எச்சரிக்கை யுடன்  முடிவை எடுக்க வேண்டும் என்று உங்களிடம் நான்  வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரியங்கா காந்தி சுமார் 20 நிமிடங்கள் மக்கள் முன்னிலையில் பேசினார். அவரது பேச்சுக்கு பொது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. பொதுமக்கள் ஆரவாரத்துடன் பிரியங்கா பேச்சை வரவேற்றனர்.