எனது நற்பெயருக்கு களங்கம் – அபாண்ட பழி! அமைச்சர் சரோஜா அலறல்

சென்னை,

மைச்சர் சரோஜா மீது ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை  போலீசில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரி புகார் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் சரோஜா , பெண் அதிகாரி “மக்கள் பணியாற்றும் என் மீது வேண்டுமென்றே அபாண்ட பழிசுமத்துகிறார்” என்று கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் மீனாட்சி. இவரிடம்,  பணி நிரந்தரம் செய்ய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது.

அமைச்சர் தன்னை மிரட்டியது தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து நான்கு நாட்களுக்கு பிறகு இன்று, சமூக நலத்துறை  அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

1.3.2017 அன்று தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலனுக்கென்று ஒதுக்கப்பட்ட மாவட்ட நிதியிலிருந்து போலியான ரசீதுகள் மூலம் அரசு நிதியை ராஜமீனாட்சி கையாடல் செய்து மோசடி செய்துள்ளதாக, சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் கடிதம் அளித்திருந்தார்.

அதன் பேரில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை விசாரணை அலுவலராக நியமித்து ராஜமீனாட்சியின் மீது பெறப்பட்ட புகார்களை விசாரணை செய்ய 6.3.2017 அன்று உத்தரவிட்டார்.

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நன்னடத்தை அலுவலர் அளித்த அதே புகாரை தமது 15.3.2017 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்கண்ட புகார்களின் பேரில் விசாரணை அலுவலரான, சிப்காட் தனிமாவட்ட வருவாய் அலுவலர் 21.4.2017 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜமீனாட்சி தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர் ஆகியோருக்கு குறிப்பாணை ஒன்றை 11.4.2017 அன்று அனுப்பினார்கள்.

21.4.2017 அன்று தருமபுரி மாவட்ட நன்னடத்தை அலுவலர் மட்டும் விசாரணைக்கு ஆஜராகி, அவர் ஏற்கனவே தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி ராஜமீனாட்சி செய்த பல்வேறு முறைகேடுகளை பட்டியலிட்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராஜமீனாட்சி விசாரணைக்கு ஆஜராகாமல், தான் 20.4.2017 அன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதால் தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என 15.4.2017 அன்று விசாரணை அலுவலருக்குகடிதம் எழுதியுள்ளார்.

விசாரணை அலுவலர் இந்த விசாரணையை 8.6.2017 அன்றைக்கு ஒத்திவைத்தும், அக்குறிப்பிட்ட நாளில் தக்க மருத்துவ சான்றிதழுடன் ஆஜராக வேண்டுமென்றும் 24.4.2017 நாளிட்ட குறிப்பாணையன்றும் மீண்டும் ராஜமீனாட்சிக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், ராஜமீனாட்சி, 7.5.2017 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னையில் உள்ள எனது இல்லத்தில் என்னை சந்தித்து, தற்காலிகமாக பணிபுரிந்து வரும் தன்னை அந்தப் பதவியில் பணி நிரந்தரம் செய்யவும், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யவும் கோரிக்கை வைத்தார்.

ஆனால், இந்த பணியில் தற்காலிமாக நியமனம் செய்யப்பட்டவர்களை நிரந்தரம் செய்யவதற்கு அரசு விதிகளில் இடமில்லை என்பதை அவரே நன்கு அறிவார். எனவே, இப்பணியை அவருக்கு நிரந்தரம் செய்ய அரசு விதிகளில் இடமில்லை என எடுத்துக் கூறி, அவரது கோரிக்கைகளைப் பரிசீலிக்க இயலாது என கூறினேன்.

மேலும், தன் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், துறை ஆணையர் மற்றும் துறைசெயலாளரை சந்திக்காமல் நேரடியாகத் துறை அமைச்சரை சந்தித்ததே எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள் நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. ஊடகங்களில் ராஜமீனாட்சி குறிப்பிட்டது போல, என்னை சந்திக்குமாறு நான் அவரை அழைக்கவே இல்லை.

எனவே, தன் மீது நடத்த இருக்கும் அரசு நிதி கையாடல் விசாரணையை திசை திருப்பும் உள்நோக்கத்துடனும், எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் மக்கள் பணியாற்றி வரும் என் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக வேண்டுமென்றே அபாண்டமாகவும், சிலரின் தூண்டுதல் காரணமாகவும் தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

ராஜமீனாட்சி கூறிய அனைத்துப் புகார்களும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.