பொன்.மாணிக்கவேல் கெடு எதிரொலி: பழமையான பெருமாள் சிலையை ஒப்படைத்த செங்கல்சூளை உரிமையாளர்

காஞ்சிபுரம்:

சிலை கடத்தல் ஐஜி பொன்.மாணிக்கவேல்  அறிவித்த கெடு எதிரொலியாக  தன்னிடம் இருந்த பழமையான பெருமாள் சிலையை செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்மாணிக்க வேல் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு காரணமாக பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரது கூட்டாளியான ரன்வீர்ஷா, மற்றும் கிரண்ஷா வீடுகளில் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்போது, சிலைகடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்க வேல், வேறு யாராவது இதுபோன்ற பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருந்தால் அதை 15 நாட்களுக்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கெடு விதித்தார். இந்த தகவல் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில், பாலூர் செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் தன்னிடம் பழமையான பெருமாள் சிலை இருப்பதாக தெரிவித்து, அந்த சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம்  ஒப்படைத்துள்ளார்.