பரிசு கொடுத்தாலும் ‘குட்டு’.. பரிகாசம் செய்தாலும் ‘திட்டு’.. மோடியை நோக்கி பாயும் தோட்டாக்கள்..

பரிசு கொடுத்தாலும் ‘குட்டு’.. பரிகாசம் செய்தாலும் ‘திட்டு’.. மோடியை நோக்கி பாயும் தோட்டாக்கள்..

ஒரே நாளில் இரண்டு பேரிடம் குட்டும், திட்டும் ஒரு சேர வாங்கி மனம் வலித்திருக்கிறார் பிரதமர் மோடி.

யார் அவர்கள்?

ஒருவர் மோடியால் பரிசளிக்கப்பட்டவரின்- மகன்.

மற்றொருவர் மோடியால் பரிகாசம் செய்யப்பட்டவரின் –மகன்.

முதல் மகனை முதலில் பார்க்கலாம்.

அவர் பெயர் –தேஸ் ஹசாரிகா.

தந்தை பெயர்- பூபன் ஹசாரிகா.

ஆம்.கொஞ்ச நாட்களுக்கு முன்பு மோடி அரசால் ‘பாரத ரத்னா’ விருது கொடுக்கப்பட்டு கவுரவம் செய்யப்பட்டவர்.

பூபன் – அசாமின் ‘இளையராஜா’ .இசை அமைப்பாளர்-பாடகர்.  அசாம் மட்டு மில்லாது –வட கிழக்கு மாநில மக்களின் பேரன்பை பெற்றவர்.

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் குடி உரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து-

அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில்-பூபனுக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்கி –நெருப்பை அணைக்கும்  முயற்சியில் ஈடுபட்டது மோடி அரசு.

பலன் கிடைக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு கவுகாத்தி,அகர்தலா உள்ளிட்ட வட கிழக்கு நகரங்களுக்கு விசிட் அடித்த மோடி-இந்த மசோதாவால் வட கிழக்கு மாநில மக்களுக்கு தீங்கு ஏற்படாது என்று ஆறுதல் சொல்லி விட்டு டெல்லி திரும்பினார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து மோடியை நோக்கி நேற்று தோட்டா ஒன்று பாய்ந்து வந்துள்ளது.தோட்டா வீசியவர் பூபனின் மகன் –தேஸ்.

நியூயார்க் நகரில் வசிக்கும் தேஸ் ‘இந்த விருதை ஏற்றுக்கொள்ள போவதில்லை’’  என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்காவில் அறிக்கை ஒன்று எழுதி –இந்தியாவில் உள்ள பத்திரிகைகளுக்கு அனுப்பி உள்ள தேஸ் –‘பேக்ஸ்’ கோளாறினால் அறிக்கை பிரசுரம் ஆவதில் தாமதம் ஏற்படுமோ என்ற சந்தேகத்தில் அசாமில் உள்ள தினசரி இதழுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

‘’இந்த சட்டத்தால் அசாம் மாநிலத்தில் நிலவும் சூழலை நான் அறிவேன். அசாம் மக்கள் போராடிய போது அவர்கள் பக்கம் நின்றவர் என் தந்தை. அவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் இந்த பரிசை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்.நானும் இந்த விருதை நிராகரிக்கிறேன்’’என்று சொல்லி விட்டு போனை துண்டித்து விட்டார்.

குட்டியவர்- அமெரிக்காவில் இருந்து – தேஸ்.

.மோடியை திட்டித்தீர்த்தவர் யார்?

ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் மகன்-நர லோகேஷ்.

என்ன காரணம்?

நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டு கர்நாடகம் போகும் வழியில் ஆந்திராவின் குண்டூருக்கும் சென்றார் மோடி.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில்  பேசிய மோடி‘’ நர லோகேஷின் தந்தை ‘’ என்று நாயுடுவை குறிப்பிட்டவர் ‘’சந்திரபாபு நாயுடுக்கு மாநில நலனை விட மகன் நலன் தான் முக்கியமாக இருக்கிறது. குடும்ப அரசியல் செய்கிறார் நாயுடு” என்று விமர்சித்தார்.

பதிலுக்கு சில மணி நேரத்தில் பதிலடி கொடுத்தார்-சந்திரபாபு நாயுடு.

இந்த விவகாரத்தின் நாயகன் –லோகேஷ் சும்மா இருப்பாரா?

டெல்லியில் நேற்று தனது தந்தையோடு உண்ணாவிரதம் இருந்தவர் –மோடியை திட்டி தீர்த்து விட்டார்.

‘’இளைஞர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்று மோடிஜி பேசுகிறார். ஆனால் மிகவும் வயது குறைந்த இளைஞர்களை தாக்கி பேசுகிறார். பா.ஜ.க.வுடன் தெலுங்கு தேசம் உறவை முறித்துக்கொண்டதால் அவர்கள்  கலக்கமடைந்து உள்ளனர்’’  என்று சீறிய லோகேஷ்’’ பா.ஜ.க.வில் தேசிய அரசியலில் மட்டும் 15 அரசியல் வாரிசுகள் உள்ளனர்’.எங்களை மட்டும் குறை சொல்வது நியாய மல்ல’’ என்று கூறிவிட்டு ஆவேசம் குறைந்தார்.

-பாப்பாங்குளம் பாரதி