டில்லி:

ந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், நேற்று மாலை மத்திய கேபினட் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதார் தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிப்பது உள்பட பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பிரதமர் வீட்டில் நேற்று மாலை மத்திய  மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதார் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  ஏற்கனவே இதற்கான மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப் படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், அரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள மான்தியில் (Manethi )  ஒரு புதிய எய்ம்ஸ் அமைப்பை நிறுவுவது தொடர்பான அறிவிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

அத்துடஉன,  மென்பொருள் தயாரிப்புகளில் ஒரு தேசிய கொள்கை மற்றும் ஒரு புதிய கனிமக் கொள்கை 2019 ஆகியவற்றை அங்கீகரித்தல் போன்ற முக்கியமான விவகாரங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தொலைத் தொடர்பு சட்டத்தின் படி வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் அட்டையை தொடர்ந்து சுயவிருப்பத்தின் பேரில் அடையாள ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆதார் இல்லை என்பதற்காக யாருக்கும் எந்த வித சேவையும் மறுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதற்கான சட்ட திருத்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆதாரைப் பயன்படுத்தும் போது தனிநபர் விவரங்களை பாதுகாப்பதற்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விதிகளை மீறுவோருக்கு ஒருகோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூடுதலாக தினம் பத்துலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாம் நபருக்கு ஆதார் தொடர்பான விவரங்களை வழங்கினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். பயோமெட்ரிக் தகவலாக ஆதார் விவரங்களை சேகரிக்கக் கூடாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.