அமைச்சரவை தீர்மானம் ஆளுநரை கட்டுப்படுத்தும்: தம்பித்துரை

சென்னை:

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிய தீர்மானம் ஆளுநரை கட்டுப்படுத்தும் சென்று பாராளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை கூறி உள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுவிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியதை தொடர்ந்து, 7 பேர் விடுதலையில் அமைச்சரவை  தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

ஆனால், ஆளுநர் இதுகுறித்து முடிவெடுக்காமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார். இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை தீர்மானம் தமிழக ஆளுநரை கட்டுப்படுத்தும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறி உள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை தருவதுதான் நியாயம் என்ற மக்களவை துணை சபாநாயக ரான தம்பித்துரை, அரசுக்கு மரியாதை தர தவறினால் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குகளில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 7 பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ராஜீவ் கொலை கைதிகளான பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து ஆளுநர் பன்வாரிலால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில்,மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களவை துணை சபாநாயகரான தம்பித்துரை, அமைச்சரவை தீர்மானம் ஆளுநரை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்து உள்ளார்.