Random image

விண்வெளிக்கு மனிதர்கள், ஓமியோபதி மசோதா உள்பட பல திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி:

விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பும் திட்டம், ஓமியோபதி மசோதா உள்பட பல திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் விண்வெளி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய ஹோமியோபதி, இந்திய மருத்துவ ஆணைய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.9,251 ஆக உயர்த்தவும். பால் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.9,920ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த திட்ட தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சிறார் மீதான மோசமான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் (POCSO Act) செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இனி குழந்தைகள் மீது மிகக்கொடூரமான பாலியல் குற்றங்களை நிகழ்த்துபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதற்காக அமைச்சரவை மரண தண்டனைக்கு ஒப்புதல் அளிக்கிறது. குழந்தைகளை பாலியல் தொழிலில், போர்னோகிராபி துறையில் திணிக்க சிலர் அக்குழந்தைகளுக்கு ஹார்மோன்களை ஏற்றி சிறுவயதிலேயே முதிர்ச்சியடைய செய்கின்றனர். இது போக்ஸோ சட்டப்பிரிவு 9-ன் படி மிகக் கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு குழந்தையின் குழந்தைப் பருவத்தை கொல்வதற்கு கொடிய மருந்துகளைப் பயன்படுத்துவதை அனுமதிக்க இயலாது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அதேபோல், சிறாரை ஈடுபடுத்தி போர்னோகிராஃபி வீடியோக்களை எடுப்பவர்கள் அவற்றை பகிர்பவர்கள் பரப்புபவர்களும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்

இவ்வாறு அவர் கூறினார்.