ஒரே பெயரில் வேட்பாளர்கள்… சரியா, தவறா?

--

வி.சி.க. தலைவர் திருமாளவன் தான்  போட்டியிட்ட காட்டுமன்னார்கோயில் தொகுதியில் 87 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் திருமாவளவன் என்ற  சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டு 289 வாக்குகள் பெற்றதை நேற்று செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இதே போல, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை  தொகுதியிலும் நடந்துள்ளது.

அந்தத் தாகுதியில் விஜயகாந்த் என்ற  பெயரில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த மூன்று  3 விஜய்காந்த்களும் டெபாசிட் இழந்துவிட்டனர்.

விஜயகாந்த் - திருமாவளவன்
விஜயகாந்த் – திருமாவளவன்

இதே தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு போட்டியிட்டார். அதே போல பாலு என்ற  சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டு நூற்றுக்குக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றிருக்கிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட, அன்புமணி பெயரில் அன்புமணியை எதிர்த்து இன்னொரு  “ சுயேட்சை” அன்புமணி நின்றார்.

பொதுவாக பிரபல வேட்பாளர்கள் பெயரிலேயே சுயேட்சை வேட்பாளரை நிறுத்துவது, வாக்காளர்களைக் குழப்பத்தான். ஆனால் இதுவரை இந்த முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைத்ததில்லை.  விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை விஜயகாந்துகளும் மிகக் குறைந்த வாக்குகளே பெற்றிருக்கிறார்கள்.

காட்டுமன்னார்கோயிலில்தான் இது ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அங்கே திருமாவளவன் தோற்றிருக்கிறார். இந்த வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்குகளை சுயேட்சை திருமாவளவன் வாங்கியிருக்கிறார்.

இப்படி பிரபல வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயருள்ள வேட்பாளர்கள் போட்டியிட அனுமதிப்பது சரியா என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது.

“ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல்தான். அதில் பெயரை காரணமாக வைத்து போட்டியிடுவதை தடுக்க முடியுமா” என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில், “இப்படி பிரபல வேட்பாளர்களின் பெயர் கொண்ட  சுயேட்சை வேட்பாளர்களுக்கு எந்தவித அரசியல் நோக்கமோ பொது எண்ணமோ கிடையாது என்பது வெளிபப்டை. குறிப்பிட்ட பிரபல வேட்பாளருக்கு எதிராகவே இவர்கள் எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்படுகிறார்கள். இதுதான் ஜனநாயகமா, அவ்வளவு ஏன்..  முதல்வர் ஜெயலலிதா தொகுதியில், அவர் பெயருள்ள சுயேட்சை நிற்க அனுமதிக்கப்படுவாரா” என்று இன்னொரு வாதமும் எடுத்துவைக்கப்படுகிறது.

இதற்கிடையே, “நாடு சுதந்திரமடைந்து 60 வருடங்ள் ஆகப்போகும் நிலையில் இன்னமும் வேட்பாளற் பெயர்களை வைத்து வாக்காளர்களைக் குழப்ப முடியும் என்றால், இது என்ன ஜனநாயகம், தேர்தல்” என்ற ஆதங்கத்தையும் பலர் எழுப்புகிறார்கள்.