டிடிவி.தினகரன் மீதான கார் இறக்குமதி செய்த வழக்கு: 27ந்தேதி இறுதி விசாரணை

சென்னை,

திமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர்  முறைகேடாக சொகுசு கார் வாங்கிய வழக்கன் இறுதி விசாரணை வரும் 27ந்தேதி நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக அறிவித்து உள்ளது.

ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு,  சசிகலாவால் அதிமுகவில் சேர்க்கப்பட்டு, அதிமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் கணவரான நடராஜன் ஆகியோர்மீது முறைகேடாக சொகுசு கார் இறக்குமதி செய்ததாக  2010ல்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கை விரைந்து முடிக்க சிபிஐ வலியுறுத்தியது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.மகாதேவன்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  பல ஆண்டுகளாக முடியாமல் தொடர்ந்து கொண்டே வரும் இந்த வழக்கின் இறுதிகட்ட   பிப். 27ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.

கடந்த வாரம்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அதற்கிடையில் அவரது கணவர் மற்றும் அவரது உறவினரான டிடிவி தினகரன் மீதான வழக்கு இறுதிவிசாரணை நடைபெறும் என்று ஐகோர்ட்டு அறிவித்திருப்பது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது  நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்கும்படி, மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தி வருவதன் அடிப்படையில் அனைத்து வழக்குகளும் மீண்டும் உயிர்பெற்றுள்ளன.

ஏற்கனவே சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றங்களில், சசிகலா மீது நான்கு வழக்குகள்; டி.டி.வி.தினகரன் மீது, இரண்டு வழக்குகள்; பாஸ்கரன், சுதாகரன், நடராஜன் மீது, தலா ஒன்று, என, மொத்தம் ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.