Random image

இவிஎம் மெஷின் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை:

மின்னணு வாக்கு எந்திரத்தை (இவிஎம்)  தனியார் சோதனை செய்ய அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில்,தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாதுகாப்பு இல்லை என்றும், ஒரு கட்சிக்கே வாக்குகள் பதிவாவதாகவும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்திலும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டை முறையிலான தேர்தலை நடத்த வேண்டும் என பெரும் பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில்,  மின்னணு வாக்கு எந்திரத்தை பயன்படுத்த புதிய வழிகாட்டுதலை உருவாக்கவும், தனியார்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதிக்க தடை விதிக்கக்  கோரியும் உச்சநீதி மன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு எதிர்க்கட்சிகள், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளன. யாருக்கு வாக்கு செலுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு வாக்கு பதிவாகும்படி அது வடிவமைக்கப்பட்டு  உள்ளது’ என்று குற்றம் சாட்டின.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. சில கட்சிகள் இதற்கும் ஒருபடி மேலே போய், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருக்கும் எனப் பரவலாக புகார்கள் வருவதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.’ என்றும் தெரிவித்து வருகின்றன.

ஆனால், தேர்தல் ஆணையமோ, ‘இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. அதில் எந்தவித கோளாறுகளும் இல்லை என்று நிரூபண மாகியுள்ளது. இனிமேல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்ய எந்தவித சவால்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறி உள்ளது.