சென்னை:

காவிரி பிரச்சினையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று குமாரசாமி கூறிய யோசனை நயவஞ்சக மானது, இந்த யோசனை காவிரி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும்  என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி, நேற்ற ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது “காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இதற்கு தமிழகம் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும், காவிரி பிரச்சினையை ஸ்ரீரங்கநாதர் பார்த்துக்கொள்வார் என்றும்,  காவிரி மேலாண்மை ஆணையம்  அரைகுறையாக தான் அமைக்கப்பட்டுள்ளது என்றும்  கூறினார்.

இது தமிழக விவசாயிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழகமும் கர்நாடகமும் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் தான் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று அம்மாநில புதிய முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ள யோசனை மிகவும் ஆபத்தானது. இது காவிரியில் தமிழகத்திற்கு உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.

இதில், தீர்வு காண்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்த அமைப்புக்கு இல்லாத நிலையில் இது பயனற்ற அமைப்பு என்பது தான் பாமக வின் நிலைப்பாடு. அதே நேரத்தில் இயல்பான மழைக்காலங்களில் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், வறட்சிக்காலங்களில் இடர்பாட்டுக்கால நீர்ப்பகிர்வு முறைப்படியும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விடுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தினால் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டுவிடும். எனவே, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக புதிய முதல்வர் குமாரசாமி நினைத்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தும் என்று அறிவிக்க வேண்டும்.

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவது உச்சநீதிமன்றம் போன்ற சட்ட அமைப்புகளையும், தமிழக மக்களையும் முட்டாள்களாக்கும் செயலாகும். காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விஷயத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழகத்திற்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்றாலும் கூட இன்றைய நிலையை எட்ட தமிழகம் பட்ட பாடுகளும், நடத்திய சட்டப் போராட்டங்களும் ஏராளமானவை.

அண்ணா காலத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி காலம் வரை காவிரிப் பிரச்சினை தொடர்பாக இருமாநிலங்க ளுக்கும் இடையே நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் கர்நாடகத்தின் பிடிவாதமும், சட்டத்தை மதிக்காத போக்கும் தான்.

காவிரிப் பிரச்சினை குறித்த கடந்த கால உண்மைகள் இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப்பிரச்சினையின் ஆழம் புரியாமல் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று கூறிவருகின்றனர்.

இந்த யோசனைகள் காவிரிப் பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கி விடும். எனவே, காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த காலத்திலும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. மாறாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.