மேகதாது அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை: ஆணைய தலைவர் மசூத்

டில்லி:

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்து உள்ளார்.

காவிரி நீர் பங்ககீடு விவகாரத்தில் உச்சநீதி மன்றம்,  காவிரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி, மாதந்தோறும் காவிரி நீர் குறித்து விவாதிக்க கூறியது. அதைத்தொடர்ந்து மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆணையத்தின் தலைவராக  நீர்வளத்துறை செயலாளரான ஆணையத் தலைவர் மசூத் உசேன் இருக்கிறார். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ஆணையக்கூட்டம் இன்று நடை பெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார் ஆணைய தலைவர் மசூத்  உசைன், அப்போது அவர் கூறியதாவது,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம், ஜனவரியில் நடைபெறும். இன்று நடை பெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது; காவிரி விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம்.இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது; காவிரி படுகை பகுதிகள் நல்ல மழை பெற்றிருக்கின்றன என்றார். மேலும்,  சில விஷயங்களில் முடிவு எடுத்துள்ளோம் என்று கூறியவர்,  மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளோம். அவற்றை கவனத்தில் கொள்வோம் என்றார்.

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு  மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என்பதையும்,  காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன்  தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோருடன் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.