செயல்பாட்டுக்கு வந்தது ‘காவிரி மேலாண்மை ஆணையம்’: மத்தியஅரசு உத்தரவு

டில்லி:

ச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும்  மத்திய அரசு அமைத்து  உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த மே மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசின் திருத்தப்பட்ட  காவிரி வரைவு திட்டத்தினை ஏற்று, காவிரி நீர் தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம்  என்று பெயரிட்டது.

அத்துடன்,  காவிரி மேலாண்மை ஆணையத்தை   பருவமழை தொடங்குவதற்கு முன்பே அமைக்க வேண்டும் என்றும், நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கே  உண்டு என்றும், இது குறித்து அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியிருநதது.

அதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து அரசிதழில் வெளியிட்டது. காவிரி நீர் தொடர்பான அனைத்து விவரங்களையும் கவனிக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக உருவானது காவிரி மேலாண்மை ஆணையம்.

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினராக அதிகாரிகளை நியமனம் செய்வதில் கர்நாடக அரசு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்தியஅரசு அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்றும், . ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைனும், செயலாளராக ஏ.எஸ். கோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். நவீன் குமார் மத்திய பொறியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தின் பொறுப்பு செயலர் எஸ்.கே.பிரபாகர் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று கேரளா மற்றும் புதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அலுவலகம் பெங்களூருவில்  இருந்து செயல்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகம் இதுவரை  உறுப்பினரை அறிவிக்காத நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளது.