பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் பலகைகள் வைத்த விவகாரம்: 3 ஐடிஐ மாணவர்கள் கைது
சென்னை:
பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தரமணி, வேளச்சேரி பகுதியில் பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் பலகைகளை வைக்கப் பட்டிருந்தது. அந்த வழியாக வந்த ரயில் மோதியதில், உடைந்து துாள் துாளானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்டு மாதம் 31ந்தேதியும், இந்த மாதம் 4ம் தேதியும் என இரண்டுமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி வந்தது. இது ரயிலை கவிழ்க்கும் சதி செயலா? என கேள்வி எழும்பியது. இதுகுறித்த ரயில்வே, ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சம்பவ இடத்தை பார்வையிட்டார். தண்டவாளத்தில் கல் வைத்த விஷமிகளை, விரைவாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், ரயில்வே தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்களை வைத்தது ஐஐடி படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது கெல்லீஸ் அரசு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
மாணவர்கள் விளையாட்டாக தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்களை வைத்ததாக கூறப்படுகிறது.