மத்திய, மாநில அரசுகளை வீழ்த்துவதே இலக்கு: திமுக தொண்டர்களுக்கு தலைவர் ஸ்டாலினின் முதல் கடிதம்

சென்னை:

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஏற்கனவே பல கடிதங்களை ஸ்டாலின் எழுதியுள்ள நிலையில், அவர் திமுக தலைவரான பிறகு முதல் கடிதம் இதுவே.

இந்த கடிதத்தில், முதுகெலும்பில்லாத தமிழக அரசையும், இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பாஜக அரசையும் வீழ்த்துவதே தி.மு.க.வின் இலக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே. புதிதாகப் பிறந்திருக்கின்றோம் நாம். ஆம் நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் லட்சிய தீபத்தை ஏந்தித் தொடர்ந்து மேற்செல்லும் மிகப்பெரும் பொறுப்புடன் நாம் புதிதாகப் பிறந்திருக்கின்றோம்.

உங்களால் உங்களுக்காகத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் தலைமைத் தொண்டன் நான். அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞரின் தகுதி வாய்ந்த நிழலில்- அவரது வழிகாட்டுதலில் கழகத்தின் வளர்ச்சியிலும், சோதனைகளிலும் சம மனநிலையுடன் பங்கெடுத்து, சிறிதும் சளைக்காமல் களம் கண்ட உங்களில் ஒருவன் இன்று உங்களின் தலைவன் என்ற பொறுப்பினை உன்னதமான உங்களால் தான் பெற்றிருக்கிறேன் என்பதை உயிருள்ளவரை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

காலத்திற்கேற்ற அணுகு முறைகள்-மக்களின் மனநிலையை உணர்ந்த மாற்றங்கள் லட்சியத்தை வென்றடைவதற்கான வியூகங்கள் இவற்றுடன் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதை நமது; பயணம் புதிது.

நூற்றாண்டு கடந்து வந்து, பல வெற்றிகளைக் குவித்துள்ள திராவிட இயக்கத்தின் பயணம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நெடும் பயணத்தில் உடனடி இலக்குகள், இரண்டு.

ஒன்று, சுயமரியாதையை அடகு வைத்த முதுகெலும்பில்லாத -ஊழல் கறை படிந்த-அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் துணையுடன் விரட்டி அடிப்பது.

மற்றொன்று, சமூக நீதிக்குக் குழிவெட்டி, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மாநில உரிமைகளைப் பறித்து மதவெறியைத் திணித்து, இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்திக் காட்டுவது.

இந்த இரண்டு உடனடி இலக்குகளும், இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நெருக்கும் பேராபத்திலிருந்து காக்கக்கூடிய பாதுகாப்பு வேலிகளாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மதசார்பற்ற சக்திகளுடன் இணைந்து அந்தப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

மத்தியில் ஆள்கின்ற நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்கினால் இந்தியாவின் ஒருமைப்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. 120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையைப் பலவீனப்படுத்தும் அனைத்து வேலைகளையும் சமூக, பொருளதார, கல்வி, மொழி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல தளங்களிலும் செய்து வருகிறது. இவற்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழ்கின்ற அந்தந்த மொழி பேசும் தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த யுத்தத்தை எதிர்கொள்கின்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து செல்வதில், மாநில சுயாட்சிக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்காக அயராது உழைக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் இருக்கும்.

சமூக நீதிக்கு எதிராகவும் மதவெறியுடனும் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசையும், சுயமரியாதை இழந்து மாநில உரிமைகளை அடமானம் வைத்த மாநில அ.தி.மு.க. அரசையும் வீழ்த்த வேண்டியது என்பது ஜனநாயக போர்க்களமான தேர்தல் களம் தான். நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து வரலாம். ஏன், இரண்டும் இணைந்துகூட வரலாம்.

எப்படி வந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் மக்கள் விரோத அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான தி.மு.க.வின் இலக்கு. நாம் என்ற உணர்வுடன் என்றும் இணைந்து பயணிப்போம். இனப் பகையை முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றி குவிப்போம். அதனை நம் உயிருக்கு மேலான தலைவர் கலைஞருக்கு லட்சியக் காணிக்கையாக்குவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.