ஜூலை 1ம் தேதியை ஜிஎஸ்டி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: ஜூலை 1ம் தேதியை ஜிஎஸ்டி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடந்த ஆண்டு இதே நாளில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். வரி செலுத்துவோருக்கு இந்தியாவில் முன் எப்பொழுதும் இல்லாத நிலையில் புதிய சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு விதித்தது. ”ஒரு நாடு, ஒரு வரி “ என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் பொருட்டு இத்தகைய வரியை மத்திய அரசு வலியுறுத்தியது.
gst
உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்த ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தது. பால் பாக்கெட் முதல் வீட்டு உபயோக பொருள்கள்,உணவகங்கள், வாகனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அனைத்தும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டுவரப்பட்டன. கருப்பு பணத்தை தடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த வரி அமுல்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி வரி அமுல்படுத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் முடிந்த நிலையில் ஜூலை 1ம் தேதியை ஜிஎஸ்டி தினமாக கொண்டான பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. ஜூலை 1ம் தேதி நடைபெற உள்ள விழாவில் ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சரும், இடைக்கால நிதித்துறை அமைச்சருமான பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். கௌரவ விருந்தினராக ஸ்ரீ ஷிவ் பிரதான் பங்கேற்பார் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி பொருளாதாரம் ரீதியாக ஏற்றுமதியாளர்கள், சிறு வர்த்தகர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், தொழில்துறை மற்றும் நுகர்வோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி வரியினால் அரசாங்கம் மட்டுமல்லாது வணிக சமூகம், வரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சவால்களை எதிர்கொள்ள இருக்கும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.