கஜா புயல் பாதிப்பு:  மத்திய அரசு ரூ.353 கோடி இடைக்கால நிவாரணம்   

ஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள்  உட்பட எட்டு மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்ள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. 60க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தென்னை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் விழுந்துவிட்டன.

பெரும்பாலான பகுதிகளில் மக்கள் குடிநீருக்கும் உணவுக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது.   இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் அம்மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.  பல்வேறு அரசியல் கட்சிகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களும் நிதி அளித்துள்ளது.  திரைத்துறை, தொழில் துறை பிரபலங்கள் பலரும் உதவி வருகிறார்கள். தன்னார்வலர்கள் பலரும் டெல்டா மாவட்டங்களில் நேரடியாக நிவாரண பணிகளில் இறங்கினர்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் தனது நவம்பர் மாதத்திற்காக ஊதியம் ரூ3.5 லட்சத்தை   நிதியாக வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். மேலும் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசின் திட்டம் மூலம் வீடு கட்டித்தரப்படும் என்றார்.

இதற்கிடையே கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். பாதிப்புகள் குறித்து அறிய மத்தியக் குழு ஒன்றையும் ஆய்வுக்காக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதனையடுத்து தமிழகம் வந்த மத்தியக் குழு மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். மத்தியக் குழுவின் இறுதி அறிக்கைக்கு பிறகு நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#centralgovernment #Gajastorm i#rs353 crore