முல்லை பெரியாரில் புதிய அணை கட்ட மத்தய அரசு அனுமதி : எதிர்த்து தமிழக அரசு வழக்கு பதிவு செய்யுமா?

முல்லை பெரியாரில் புதிய அணை கட்ட மத்தய அரசு அனுமதி அளித்துள்ளது, நீதிமன்ற அவமதிப்பு என்றும் இதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளயிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“முல்லை பெரியார் அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள அரசிற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.

கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட அதீத மழைப்பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும். மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவிற்கு முக்கியக் காரணமாகும். உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.

இதுமட்டுமில்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது என(reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து வரும் நிலையில் முல்லை பெரியார் போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதுமட்டுமின்றி முல்லை பெரியார் அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும். மேலும் 2014ஆம் ஆண்டு State of Tamilnadu vs State kerala முல்லை பெரியார் வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் ”இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதை சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துதான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும். தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமைகிறது. இந்த இடம் வண்டிப்பெரியாரிலிருந்து 8கிமீ தூரத்தில் உள்ளது. தற்போது இருக்கும் அணையிலிருந்து 1200அடி கீழ்திசையில் அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்திற்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அணையின் உயரம் 174.6அடி, நீளம் 1214அடி

இதற்கு துணை அணையாக 82அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663கோடியாகும்.

இந்த அணை கட்டுவதால் 0.017டி.எம்.சி அதிக நீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும். 0.502சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும். ஆனால் முல்லை பெரியார் புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.

புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணை பகுதி பகுதியாக செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்க திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” –  இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.