டில்லி,

ச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் தலைமை நீதிபதிமீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான நீதித்துறையிலே தலைமை நீதிபதி மீது  குற்றம் சாட்டி செய்தி யாளர்களை சந்தித்திருப்பது மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக நீதிபதிகள் விவகாரத்தில், ஒதுக்கி இருக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டில்லி வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று மதிய வேளையில் செய்தியாளர்களை சந்தித்த உச்சநீதி மன்றத்தில் உள்ள  மூத்த நீதிபதிகள் சிலர்  தலைமை நீதிபதி மிஸ்ரா மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.

உச்சநீதி மன்றத்தில் கடந்த சில மாதங்களாக  விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய் ஆகிய 4 நீதிபதிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.  உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என கூட்டாக பேட்டி யளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த பேட்டியின்போது, ஏற்கனவே தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்திய வரலாற்றில் இதுவரை நடைபெறாத இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

அதைத்தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் பேசிஉள்ளார் என தகவல்களும்,  அதேநேரத்தில்  தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, அட்டார்னி ஜெனரல் வேணு கோபாலை சந்தித்து பேசியதாகவும், இவர்கள் இருவரும் கூட்டாக பதிலை செய்தியாளர்கள் முன்னதாக அளிக்கலாம் என தகவல்கள் வெளியானது.

ஆனால், தலைமைநீதிபதி செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற இக்கட்டான சூழலில், முன்னாள் நீதிபதிகள் சிலர் மத்திய அரசின் நிர்வாகத்திறமின்மையை காட்டுவதாக விமர்சித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்த விவகாரத்தில்,  மத்திய அரசு தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் விலகி நிற்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதுவரையில் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிபதிகள் பகிரங்கமாக கருத்து தெரிவித்து இருப்பது,  நீதித்துறையின் உள்விவகாரம் என மத்திய அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளதாக சட்டத்துறை வட்டார  தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக நீதிபதிகள் விஷயத்தில் மத்திய அரசு தலையிட விரும்பாத சூழல் நிலவுவதாகவே கருதப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் குறித்து  மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பிரதமர் மோடியை சந்திக்கவில்ல என்றும் மற்றொரு தகவல்கள் கூறுகிறது.