டில்லி:

குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களில் ஜங் புட் எனப்படும் நொறுக்குத்தீனி மற்றும் குளிர்பான விளம்பரங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

ஜங்புட் எனப்படும் நொறுக்குத் தீனிகளால் குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதை தொடர்ந்து மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே ஜங்புட்-ஐ தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு மாநில நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையிலும், பள்ளி கல்லூரிகளின் கேன்டீன்களில் ஜங்புட் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என கல்வித்துறையும் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது மத்திய அரசு சேனல்களிலும், குளிப்பாக குழந்தைகள் அதிகம் விரும்பி பார்க்கும் கார்டூன் சேனல்களில் ஜங் புட் குறித்த விளம்பரங்கள் மற்றும் குளிர்பானங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடக்கூடாது என அதிரடியாக அறிவித்து உள்ளது.

ஜங்புட் எனப்படும் நொறுக்கு தீனிகள் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உணவு பொருட்களில்,  சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

இதன் காரணமாக குழந்தைகள் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிக்கப்படுவதாகவும், உடலின்  நரம்பு மண்டலத்தை பாதித்து அதன் காரணமாக அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அதிகம் கொழுப்புச்சத்து  உடைய  ”ஜங் புட்” களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடற்பருமன், குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜங்புட் எனப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள நொறுக்கு தீனிகள், மற்றும் குளிர்பானங்கள் குறித்து, குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டுன் சேனல்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேனல்களில் ஒளிபரப்பக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.