திருவனந்தபுரம்:

மாடு, எருமைகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கேரளா மாநிலத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அங்கு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் என அனைத்து தரப்பிலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில்,‘‘ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இந்தியாவில் பல தரப்பட்ட மதங்களும், கலாச்சாரமும் உள்ளது. பன்முகத்தன்மை தான் நாட்டின் ஜனநாயகத்தின் ஆதாரம்.

மத்திய அரசின் பல நடவடிக்கைகள் இதற்கு எதிராகவே உள்ளது. பசு வதைக்கு எதிராக செயல்படுவதாக கூறி சங் பரிவார் அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுகின்றன. கால்நடைகள் இறைச்சி என்பது நாட்டின் கோடி கணக்கான மக்களின் உணவு உரிமையாகும்’’ என்றார்.

கேரளா வேளாண் அமைச்சர் சுனில்குமார் கூறுகையில்,‘‘ மத்திய அரசின் இந்த முடிவை ஏற்க முடியாது. அரசியலமைப்புக்கு எதிரானதாகும். இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும். கால்நடைகளை பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு அதிகப்படியாக செயல்படுகிறது. மாட்டு இறைச்சி சாப்பிட தடை விதிப்பதை ஏற்க முடியாது’’ என்றார்.

சிபிஐ (எம்) மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பயங்கர எதிர்ப்பை மத்திய அரசு சந்திக்க நேரிடும்’’ என்றார்.

கேரளா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஹசன் கூறுகையில, ‘‘இந்த முடிவு ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. மனித உரிமைக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையாகும். இந்த உத்தரவு குறிப்பாக கேரளா மக்களின் உணவு உரிமையை பறிக்கும் செயலாகும். கேரளாவில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் இது வரை இல்லை. மத்திய அரசின் புதிய உத்தரவை கேரளாவில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ உ.பி.யில் பாஜ அரசு மாட்டு அரசியலை அமல்படுத்தியுள்ளது. தற்போது கேரளாவிலும் இதை அமல்படுத்த பாஜ முயற்சிக்கிறது. இதை காங்கிரஸ் தடுக்கும்’’ என்றார்.

பாஜக சுரேந்திரன் கூறுகையில்,‘‘ இது வரவேற்க தகுந்த அறிவிப்பு. எல்லை பகுதியில் சுகாதாரம் இல்லாத நிலையில் ஆயிரகணக்கான மாடுகள் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டு இறைச்சியாக விற்பனை செய்யப்படுகிறது. இது தீவிர ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறது’’ என்றார்.